Breaking News

திருமணமான பெண்கள் அதிகபட்சம் எவ்வளவு நகைகள் வீட்டில் வைத்து இருக்கலாம் தெரியுமா? ரூல்ஸ் இதுதான்:

 


திருமணமான பெண்கள் வீட்டில் எந்த ஆவணங்களும் இன்றி எவ்வளவு நகைகளை வீட்டில் வைத்து இருக்கலாம். திருமணம் ஆகாத பெண்கள் எவ்வளவு வைத்து இருக்கலாம்..

என்பது தொடர்பாக மத்திய அரசின் விதிகள் என்ன சொல்கிறது என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் பெண்களுக்கு நகைகள் மீது அலாதி பிரியம் உண்டு. எந்த ஒரு விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் விதவிதமான நகைகளை அணிந்து செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவரவர் வசதிக்கேற்ப தங்களுக்கு தேவையான நகைகளை வீட்டில் வாங்கி வைத்து இருப்பார்கள்.

தங்க நகைகள்: தங்கத்தை பொறுத்தவரை வெறும் அணிகலனாக பயன்படுவது மட்டுமின்றி சிறந்த முதலீடாகவும் உள்ளது. இதனால், தங்கம் மீது மக்களுக்கு எப்போதுமே விருப்பம் அதிகமாக உள்ளது. ஆனால் தங்க நகைகளை வீட்டில் வாங்கி வைத்து இருக்கும் பலருக்கும் அதிகபட்சம் எவ்வளவு நகைகள் வைத்திருக்கலாம்.. எந்த அளவு நகைகளுக்கு மேல் வைத்திருந்தால் ஆவணங்கள் காட்ட வேண்டும் என்ற சந்தேகங்கள் எழும்.

திருமணமான பெண்கள்: ஏனெனில், வருமான வரித்துறை சோதனையின் போது வீட்டில் ரொக்கமாக பணம் இவ்வளவு பிடிபட்டது.. இத்தனை கிலோ தங்கம் கிடைத்தது என்றெல்லாம் செய்திகள் வெளியாகும். இதனால், நமது வீட்டில் அதிகபட்சமாக ஆவணங்கள் இன்றி எவ்வளவு தங்க நகைகள் வைத்துக்கொள்ளலாம்.. தங்க நகைகள் வைப்பதற்கு லிமிட் எதுவும் உண்டா என்றெல்லாம் இல்லத்தரசிகளுக்கு சந்தேகம் எழும்.. இது பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.

500 கிராம் வரை: நேரடி வரிகள் வாரியம் விதிகளின் படி, திருமணமான பெண் ஒருவரிடம் எந்த வித ஆவணங்களும் இன்றி அதிகபட்சம் 500 கிராம் வரை தங்க நகைகள் வைத்துக்கொள்ள முடியும்.. இதையே சவரனாக கணக்கிட்டால் தோராயமாக 60 பவுன் வைத்துக்கொள்ள முடியும். அதற்கு மேல் நகைகள் வைத்துக்கொள்ள முடியாதா? என கேள்வி எழலாம்.

எவ்வளவு நகைகள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.. ஆனால், 500 கிராமிற்கு மேல் வைத்திருக்கும் நகைகளுக்கு கணக்கு காட்ட வேண்டியிருக்கும். தங்கத்தை வாங்குவதற்கான பணம் நமக்கு எப்படி வந்தது என்பதை அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் காட்ட வேண்டியிருக்கும்.

ஆண்கள் எவ்வளவு வைத்துக்கொள்ளலாம்: திருமணம் ஆகாத பெண்கள் தங்களிடம் 250 கிராம் நகைகள் வரை வைத்துக்கொள்ளலாம். ஆண்கள் என்றால் 100 கிராம் நகைகள் வரை எந்த ஆவணமும் இன்றி வீட்டில் வைத்துக்கொள்ளலாம். இதற்கு நகை வாங்கியதற்கான பில், வருமான ஆதாரம் என எதையும் காட்ட தேவையில்லை. எனவே ஒரு பேச்சுக்கு அதிகாரிகள் ரெய்டு வந்தால் என்றே வைத்துக்கொள்வோம்.

அதிகபட்ச உச்ச வரம்பு: வீட்டில் இந்த லிமிட்டிற்குள் தங்க நகைகள் இருந்தால் அவர்களால் இந்த தங்கம் குறித்து எதுவும் கேட்க வேண்டியது அவசியம் இல்லை. பறிமுதலும் செய்ய மாட்டார்கள். அதற்கு மேல் இருந்தால் மட்டுமே கேள்வி எழுப்பப்படும். தங்க நகைகளை பொறுத்தவரை வீட்டில் வைத்திருப்பதற்கு அதிகபட்ச உச்ச வரம்பு எதுவும் கிடையாது. ஆவணங்களுடன் எவ்வளவு நகைகள் வேண்டும் என்றாலும் வைத்துக்கொள்ள முடியுமாம்.

No comments