Breaking News

மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு: பள்ளிக் கல்வித் துறை வடிவமைப்பு

1265650
 

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக புதிய வழிகாட்டி கையேட்டை பள்ளிக் கல்வித் துறை வடிவமைத்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வாசிப்பு இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நுழை, நட, ஓடு, பற என்ற வாசிப்பு நிலைகளில் 53 புத்தகங்கள் உருவாக்கப்பட்டு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் (2024-25) 70 புத்தகங்கள், வாசிப்பு இயக்கக் கையேடு ஆகியவை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: "சிறு புத்தகங்களின் மூலமாக மாணவர்களுக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை உண்டாக்கி தொடர் வாசிப்பை செயல்படுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். ஒரு கதை ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் இந்த புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து நூலக பாடவேளையில் வாசிப்பு இயக்கப் புத்தகங்களை மாணவர்களிடம் அளித்து அவர்கள் முறையாக வாசிக்கிறார்களா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். மாணவர் வாசிப்புத் திறன் மேம்பாட்டில் உயரதிகாரி முதல் ஆசிரியர் நிலை வரை ஒரு கூட்டு நடவடிக்கை அவசியமாகிறது. வாசிப்பு இயக்கத்தின் நோக்கம், தேவை, கதை வாசிப்புக்கான நேரம், தலைமை ஆசிரியர் பணிகள் போன்ற வழிகாட்டுதல்கள் இந்த கையேட்டில் இடம் பெற்றுள்ளன. இதை தலைமையாசிரியர்கள் முழுமையாக படிக்க வேண்டும்.

இதுதவிர 1 முதல் 12-ம் வகுப்பு வரை வாசிப்பு இயக்கப் புத்தகத் தொகுப்புகள் வழங்கப்படும். 4 முதல் 9 வரை உள்ள வகுப்புகளுக்கான கால அட்டவணையில் நூலக பாடவேளைகள் இருப்பது உறுதி செய்யப்படும். இலக்கிய மன்ற செயல்பாடுகள், தமிழ் மற்றும் ஆங்கில மொழி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்திலும் வாசிப்பு இயக்க புத்தகங்கள் பயன்படுத்தப்படும். இதுகுறித்து ஆய்வு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments