செல்வமகள் சேமிப்பு திட்டம்.. வெறும் ரூ.250 போதுமே.. சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் சூப்பர் வசதி பாருங்க
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்கிற செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன? இந்த திட்டத்தில் இணைந்தவர்கள் மாத தொகையை எப்படி டிஜிட்டல் முறையில் செலுத்தலாம் தெரியுமா?
பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமே இந்த செல்வமகள் சேமிப்பு திட்டமாகும்.. அதிக வட்டி வழங்கப்படும் திட்டம் என்பதால், வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை இந்த திட்டம் பெற்று வருகிறது.
செல்வ மகள்: வெறும் ரூ.250 அல்லது நீங்கள் விரும்பும் தொகையை செலுத்தி, இந்த செல்வமகள் கணக்கை தொடங்கிவிடலாம்.. அதேசமயம், ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.. வருடத்துக்கு மொத்தமாகவும் செலுத்தலாம்.. அதிகபட்சமாக ஒரு வருடத்தில் ரூ. 1.5 லட்சம் வரை செலுத்தலாம்.
சேமிப்புக் கணக்கிற்கு முதிர்வு என்பது, கணக்கு தொடங்கப்பட்ட அன்றிலிருந்து 21 வருடங்களில் முடிவு பெறும். கணக்கு தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும்தான் சேமிப்பு தொகையை நீங்கள் செலுத்த முடியும்..
கல்வி செலவு: உங்கள் பெண் குழந்தை 18 வயதை நெருங்கும்போது, அவர்களது கல்வி செலவுக்காக, இதன் முதலீட்டிலிருந்து பாதி தொகையை எடுத்துக்கொள்ளலாம்.. பெண்ணுக்கு 24 வயது ஆகும்போதோ அல்லது திருமணத்தின் போதோ கணக்கிலுள்ள மொத்தத் தொகையை எடுத்துவிட்டு கணக்கை நீங்கள் மூடி விடலாம்.
பெண் குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் சேரலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளை மட்டுமே இணைக்க முடியும். ஒருவேளை, இரட்டை குழந்தைகள் அல்லது ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் என்றால், அவர்களுக்கென்றே விதி விலக்கு உண்டு.
போஸ்ட் ஆபீஸ்: இந்த செல்வ மகள் திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச முதலீட்டு தொகை 250 ரூபாயாகும்.. போஸ்ட் ஆபீஸ்களில் செல்வமகள் திட்ட கணக்கினை தொடங்கலாம்.. அல்லது பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகள் மூலம் தொடங்கலாம். அதேபோல, பொதுத்துறை வங்கிகளான SBI போன்ற வங்கிகளின் வெப்சைட்களிலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். தனியார் வங்கிகளான ICICI BANK, AXIS BANK, HDFC BANK போன்ற வெப்சைட்களில் இருந்தும் பெறலாம்.
அதேபோல, ஆன்லைன் மூலமாகவும் இந்த கணக்கை ஆக்டிவேட் செய்ய முடியும். இந்த திட்டத்தில் இணைந்தவர்கள் மாத தொகையை டிஜிட்டல் முறையிலும் செலுத்தலாம்.. எப்படி தெரியுமா?
மொபைல் ஆப் கட்டாயம்: ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்த முடியும்.. எனினும், இதற்கு IPPB என்ற மொபைல் ஆப் வைத்திருக்க வேண்டும்.
IPPB மொபைல் ஆப் "DOP சேவைகள்" என்பதைக் கிளிக் செய்து, பிறகு "சுகன்யா சம்ரித்தி" கணக்கு எண் மற்றும் DOP வாடிக்கையாளர் ஐடியை பதிவிட வேண்டும்.. வைப்பு தொகையை பதிவு செய்த பிறகு, உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP ஐ உள்ளிட்டு "சமர்ப்பி" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும்.. ஆன்லைனிலே செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் மாதத்தொகையை நீங்கள் எளிதாக செலுத்தி விடலாம்.
வட்டி விகிதங்கள்: ஏப்ரல் - ஜுன் வரையிலான காலத்திற்கு, செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இப்போதுள்ள 8.2% வட்டியே நீடிக்கும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments