Breaking News

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு! முதல் நாளே 3 ஸ்வீட் நியூஸ்..!

 


2023-2024 கல்வியாண்டு முடிந்து 2024-2025ஆம் கல்வியாண்டு இன்று தொடங்குகிறது. இதனையடுத்து தமிழகத்தில் இன்று பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது.

இதையடுத்து பள்ளி கல்லூரிகள் மாணவர்களை வரவேற்க தயாராகி இருக்கின்றன. பள்ளி வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 10ஆம் தேதி திங்கள் அன்று மூன்று இனிப்பான விஷயங்கள் மாணவர்களுக்கு கிடைக்கப் போகின்றன. ஒன்று, பாடப் புத்தகங்கள். சென்னை டிபிஐ வளாகத்தில் அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகள் மே மாத கடைசி வாரத்திலேயே முடிவுக்கு வந்தன. அதன்பிறகு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் ஒவ்வொரு பள்ளியாக தலைமை ஆசிரியர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.மழையால் சேதமடையாதவாறு புத்தகங்களை பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே பாடப் புத்தகங்கள் கிடைத்துவிடும்.

இரண்டு, அனைத்து மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 3ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு மேற்சொன்ன ஏற்பாட்டை செய்துள்ளது.நடப்பாண்டு பள்ளிகள் திறப்பு தாமதமானதால் ஜூன் 10ஆம் தேதி அன்று அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க சமூக நல ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

மூன்று, மாணவர்களின் பெற்றோருடன் தொலைபேசி எண்களை எமிஸ் இணையதளத்தில் பதிவிடும் பணிகள் சிறப்பான முறையில் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 1.02 கோடி மாணவர்களின் தொலைபேசி எண்கள் OTP அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளன.இதற்கான பணியில் பள்ளி ஆசிரியர்கள் கோடை விடுமுறையில் தான் ஈடுபடத் தொடங்கினர். அதற்குள் ஒரு கோடிக்கும் அதிகமான பெற்றோர்களின் எண்களை வாங்கி சரிபார்த்து பதிவேற்றம் செய்திருப்பது கவனிக்கத்தக்கது. இதற்காக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே மாணவர்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து பெற்றோர்களுக்கு தொலைபேசி எண்களுடன் இணைக்கப்பட்டுள்ள வாட்ஸ்-அப்பிற்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் வகுப்பறையில் மாணவர்கள் எவ்வாறு கற்கின்றனர், வருகை பதிவேடு, பள்ளிக்கு வரும் நேரம், ஆசிரியர்களிடம் நடந்து கொள்ளும் முறை, தேர்வில் பெறும் மதிப்பெண்கள், என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் போன்ற பல்வேறு தகவல்கள் பெற்றோர்களிடம் வாட்ஸ்-அப் மூலம் பகிரப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

No comments