டிஎன்பிஎஸ்சி க்ரூப் 4 தேர்வில்.. கேட்கப்பட்ட கே.பாலசந்தர் பட பாணி கேள்வி! விடை என்ன தெரியுமா?
இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் கே பாலசந்தர் படப் பாணியில் கேட்கப்பட்ட கேள்வி இணையத்தில் பரவி வருகிறது.
அது என்ன கேள்வி.. அதன் பதில் குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் அரசுப் பணிகளை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தான் நிரப்பி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும்.
டிஎன்பிஎஸ்சி காலியிடங்களைப் பொறுத்து குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல வகையான தேர்வுகள் நடத்தும். மாநிலம் முழுக்க பல லட்சம் இளைஞர்கள் இதற்காகவே தயாராகி வருகிறார்கள்.
க்ரூப் 4: இந்தாண்டு க்ரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த க்ரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கப் பிப்ரவரி 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் விஏஓ, வனக் காவலர், விஏஓ, பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் , இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் என மொத்தம் 6,244 காலியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அரசுப் பணிகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பித்தனர். சுமார் 20 லட்சம் பேர் க்ரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தனர். 4 தேர்வைப் பொறுத்தவரை இதை எழுத 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும்.. மேலும், நேர்முகத் தேர்வு இல்லை. எழுத்துத் தேர்வில் கட் ஆப் மார்க் அடிப்படையில் வேலை வழங்கப்படும். இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் க்ரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பார்கள்..
இன்று தேர்வு: இந்தாண்டு டிகிரி, என்ஜினியரிங் படித்தவர்கள் உட்பட மொத்தம் 20 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். 2 வாரங்களுக்கு முன்பு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்ட நிலையில், இன்று குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது.. காலை 9.30 மணிக்குத் தொடங்கிய க்ரூப் 4 தேர்வு 3 மணி நேரம் நடைபெறும் நடைபெற்றது.
இதில் தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதற்கிடையே க்ரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இணையத்தில் பரவும் கேள்வி: ரமீலா கூறுகையில், "எனது மாமனாரான ராமனாதனின் ஒரே மகனான ராமன் ராகவியின் தந்தை".. ரமணி, ராகவியின் சகோதரி என்றால் ரமணி ராமாதனுக்கு என்ன உறவு? என்பதே அந்த கேள்வியாகும். அதற்கு 5 ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன.. மனைவி, சகோதரி, மகள், பேத்தி மற்றும் விடை தெரியவில்லை என்று 5 ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கேள்வி தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த கேள்விக்கு என்ன பதிலாக இருக்கும் என்பது குறித்து நெட்டிசன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்லி வருகிறார்கள். இதற்கு என்ன பதில் என உங்களுக்குத் தெரிந்தால் கமெண்டில் சொல்லுங்கள்..
No comments