Breaking News

மாம்பழம் விற்று லட்சங்களில் வருமானம் ஈட்டும் அரசுப் பள்ளி..

 


லகம் அமைதியற்ற சூழல்களால் நிரம்பியிருக்கும் இவ்வேளையில், இரக்கத்தின் கதைகள் மனித இனத்திற்குள் வாழும் நற்குணங்களை நமக்கு நினைவூட்டுகின்றன.
சமீபத்தில் கர்நாடகாவில் மனதைத் தொடும் கதை ஒன்று, பல மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், பள்ளிக்கு வருமானம் வர வேண்டும் என்பதற்காக, அரசுப் பள்ளிக்கு மாமரம் நட்டு நிலத்தை கொடுத்துள்ளார்.

கர்நாடகாவின் கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தாலுகாவில் உள்ள அவலகுப்பா கிராமத்தைச் சேர்ந்த சிக்கசித்தப்பா (Chikka Siddappa), 1965ம் ஆண்டு, தன் கிராமத்துக்கு ஏதாவது பங்களிக்க வேண்டும் என நினைத்தார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர், தம்மூரில் உள்ள அரசு இளநிலை தொடக்கப்பள்ளிக்கு, 10 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். தானமாக வழங்கப்பட்ட நிலத்தை அவர் காலியாகக் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர் அங்கு மா மரக்கன்றுகளை நட்டார், இதனால் மாங்காய்கள் காய்க்கும் மற்றும் பள்ளிக்கு வருமானமும் கிடைக்கும்.

இதனையடுத்து, மாம்பழ சீசன் வரும்போது, ​​பள்ளிக்கூடத்தில் மாம்பழம் விளைச்சல் அதிகமாக இருக்கும், அதனால் நல்ல வருமானமும் கிடைக்கும். அதைப்போல், இந்த ஆண்டு ஏலத்தில் பள்ளிக்கு ரூ.5.2 லட்சம் வருமானம் கிடைத்தது. ஏலத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பள்ளிக்கும், மீதித் தொகை தோப்பைப் பராமரிக்கும் நபருக்கும் வழங்கப்படுகிறது.

சிக்கசித்தப்பாவை அடுத்து இவரது மகன் முலவாகிலப்பா 52 வயதானவர், தற்போது தோப்பை பராமரித்து வருகிறார். இது குறித்து தலைமை ஆசிரியர் சங்கர் கூறியவது, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் இந்தாண்டு மாம்பழங்கள் ஏலம் விடப்பட்டன. இப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 12 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். முன்னதாக, மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. ஆனால், அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் வளர்ச்சியால், பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மாம்பழ ஏலத் தொகை எஸ்டிஎம்சி தலைவர் மற்றும் தலைமை ஆசிரியரின் கூட்டு வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பணம், பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்கவும், அவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லவும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது சுமார் ரூ.4 லட்சம் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

கோலார் மாவட்டம் ஸ்ரீனிவாஸ்பூர் தாலுக்காவில் மாம்பழ அறுவடை துவங்கியுள்ளது, இந்நிலையில், இங்கு விவசாயிகள் மாம்பழம் பயிரிட்டு வருமானம் ஈட்டி வருகின்றனர். அதே நேரத்தில் கோலார் மாவட்டம், சீனிவாசப்பூர் தாலுகா, ஹோடாலி கிராமப் பஞ்சாயத்து, அவலகுப்பா கிராமத்தின் அரசு இளநிலை தொடக்கப்பள்ளியின் சர்வே எண். 95 இல், 10 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள மா தோட்ட அறுவடையை கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் எஸ்.டி.எம்.சி. பள்ளி வளாகத்தில் கடந்த புதன் கிழமையன்று தலைவர் தலைமையில் திறந்தவெளி ஏலம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments