Breaking News

NEET: காணாமல் போன நீட் மாணவன்... இந்தியா முழுவதும் 23 நாள்கள் பயணம்; கோவாவில் கண்டுபிடித்த தந்தை!

 


கல்வியைத் தொடர விரும்பவில்லை' எனச் சமீபத்தில் மாயமான, நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவனை அவரின் தந்தை கோவாவில் உள்ள ரயில் நிலையத்தில் கண்டுபிடித்துள்ளார்.

ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் தங்கி மூன்று வருடங்களுக்கும் மேலாக நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 19 வயது மாணவர் ராஜேந்திர மீனா. இவர் நீட் தேர்வு எழுதிய அடுத்தநாள், மே 6-ம் தேதியிலிருந்து காணவில்லை.

மாணவன் காணாமல் போவதற்கு முன்பு `எனது கல்வியைத் தொடர விரும்பவில்லை. என்னிடம் ரூ. 8,000 இருக்கிறது; ஐந்து வருடங்களில் செலவாகிவிடும். என்னைப்என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். தேவைப்பட்டால், வருடத்துக்கு ஒரு முறை கண்டிப்பாக அழைப்பேன்' என மெசேஜ் அனுப்பிவிட்டுச் சென்றுள்ளார்.

ராஜேந்திர மீனா

இதனை தொடர்ந்து அம்மாணவரின் தந்தை கோட்டா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், மாணவனைத் தேட அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மாணவனைத் தேட களத்தில் இறங்கிய குடும்பத்தினர்...

காவல்துறையினரின் மெத்தனப்போக்கைத் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். குடும்பத்தினரே மூன்று மூன்று பேராக நான்கு குழுக்களாகப் பிரிந்து மாணவனைத் தேடத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து மாணவனின் மாமா மதுரா லால் கூறுகையில், `நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என்பதால் தனது தொலைபேசியை விற்றுவிட்டு கோட்டாவை விட்டு மே 6 அன்று வெளியேறிய மாணவன் புனே ரயிலில் சென்றுள்ளார். அங்கு இரண்டு நாள்கள் வரை தங்கியிருக்கிறார்.

புனேவில், ரூ.1,500-க்கு ஒரு செகண்ட் ஹேண்ட் மொபைல் போனை வாங்கி, ஆதார் கார்டைப் பயன்படுத்தி சிம் வாங்கி, அமிர்தசரஸ் சென்று அங்குள்ள பொற்கோவிலுக்குச் சென்றிருக்கிறார். பிறகு, ஜம்முவில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலுக்குச் சென்றிருக்கிறார்.

கோட்டா போலீஸார் முயற்சி செய்திருந்தால், சிறுவனின் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட சிம் கிடைத்ததும், அவரை புனேவிலேயே கண்டுபிடித்திருப்பார்கள். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை.

ஜம்முவிலிருந்து, ஆக்ரா சென்று தாஜ்மஹாலை பார்த்துவிட்டு, ஒடிசாவில் உள்ள ஜகன்னாத் புரி தாமுக்கு ரயிலில் ஏறியிருக்கிறார். பின்னர், அவர் தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்திற்குச் சென்றுள்ளார். அங்கிருந்து கேரளாவுக்குச் சென்றார், பிறகு அவர் கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்குச் சென்றிருக்கிறார்.

அதன்பின் கோவாவுக்குச் சென்றார். அங்கு புதன்கிழமை காலை மட்கான் ரயில் நிலையத்தில் அவரின் தந்தை ஜகதீஷ் பிரசாத் ரயிலில் ஏறவிருந்தபோது அவரைக் கண்டுபிடித்தார். அந்தச் சமயம் அவரிடத்தில் ரூ.11,000 பணம் இருந்துள்ளது.

புத்தகங்கள், மொபைல் போன் மற்றும் இரண்டு சைக்கிள்களை விற்று பணத்தைப் பெற்றுள்ளார். கொண்டு சென்ற பணத்தை மிச்சம் செய்வதற்காக பல நேரங்களில் டிக்கெட் இல்லாமல் ரயில்களில் பயணம் செய்திருக்கிறார். 23 நாள்கள் நாடு முழுவதும் சுற்றி வந்துள்ளார்'' என்று கூறியுள்ளார்.

இப்போது மாணவனுக்கு என்ன விருப்பமோ அதையே செய்யும்படி குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், விக்யான் நகர் இன்ஸ்பெக்டர் சதீஷ் சவுத்ரி கூறுகையில், ``சந்தேகத்திற்குரிய பல்வேறு இடங்களில் குடும்ப உறுப்பினர்களுடன் போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டன. சிறுவனின் தந்தையுடன் ஒரு போலீஸ் குழு மும்பையில் தங்கியிருந்தது, தந்தை மற்றும் இரண்டு உறவினர்கள் அம்மாணவனைத் தேட கோவாவுக்குச் சென்றனர். மேலும், அவரை மட்கான் ரயில் நிலையத்தில் கண்டுபிடித்தனர். அந்த இளைஞன் தற்போது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்'' என்று தெரிவித்துள்ளார்.

No comments