Breaking News

ஏப்ரல் 1 முதல் புதிய ஓய்வூதிய முறை... அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கும் நன்மைகள்

 


 மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக பல வித முக்கிய செய்திகள் கிடைத்துக்கொண்டு இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம். மத்திய அரசு சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும்

UPS எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கம் பணி ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதாகும். அரசின் இந்த முடிவு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கிறது. மத்திய அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள், ஓய்வுக்குப் பிறகு நிதி ஸ்திரத்தன்மையைப் பராமரிக்க இது உதவுகிறது.

இந்தத் திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme) மற்றும் தேசிய ஓய்வூதிய முறை (National Pension System) ஆகியவற்றின் நன்மைகளை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், ஊழியர்கள் ஓய்வுக்குப் பிறகு ஒரு நிலையான ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். இது அவர்களின் நிதி நல்வாழ்வை உறுதி செய்கிறது. இது NPS இன் கீழ் கவர் செய்யப்பட்டு UPS ஐத் தேர்ந்தெடுத்த ஊழியர்களுக்குப் பொருந்தும்.

Benefits of UPS: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய நன்மைகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் பல முக்கிய நன்மைகளை வழங்குகிறது. அவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

உத்தரவாத ஓய்வூதியம்: UPS இன் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடந்த 12 மாதங்களிலிருந்து அவர்களின் சராசரி சம்பளத்தில் 50% -ஐ ஓய்வூதியமாகப் பெறுவார்கள். இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற, ஒரு ஊழியர் குறைந்தது 25 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

விகிதாசார ஓய்வூதியம்: 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் 25 ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றிய ஊழியர்கள் விகிதாசார அடிப்படையில் ஓய்வூதியம் பெறுவார்கள்.

குறைந்தபட்ச ஓய்வூதியம்: புதிய ஓய்வூதியத் திட்டம், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ரூ.10,000 குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது.

குடும்ப ஓய்வூதியம்: ஒரு ஊழியர் துரதிஷ்டவசமாக இறந்தால், ஓய்வூதியத் தொகையில் 60% அவரது குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

நிதிப் பாதுகாப்பு: இந்தத் திட்டம், ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு நிதி ரீதியாகப் பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்கிறது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கான தகுதி என்ன?

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) தகுதி பெற, ஊழியர்கள் பின்வரும் அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும்:

- இந்தத் திட்டம் தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்குப் பொருந்தும்.

- ஊழியர்கள் NPS கட்டமைப்பின் கீழ் UPS ஐத் தேர்வு செய்ய வேண்டும்.

UPS vs NPS: இரு ஓய்வூதிய முறைகளுக்கும் இடையில் உள்ள முக்கிய வேறுபாடுகள் என்ன?

UPS ஓய்வுக்குப் பிறகு நிலையான ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது. ஆனால், NPS சந்தையுடன் இணைக்கப்பட்ட வருமானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆகையால் இதில் நிலையான ஓய்வூதியத்திற்கான உறுதி அளிக்கப்படுவதில்லை. இதுவே ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) மற்றும் தேசிய ஓய்வூதிய முறை (NPS) ஆகியவற்றுக்கு இடையேயான முதன்மையான வேறுபாடாக கருதப்படுகின்றது. ஆகையால், ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்தைத் தேடும் ஊழியர்களுக்கு UPS ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

 

No comments