Breaking News

போட்டி தேர்வில் பாஸாகியும் வேலை தராததால் ஆத்திரம்: குடும்பத்துடன் போராட 3,000 ஆசிரியர்கள் முடிவு

 


போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று எட்டு மாதங்களாகியும், பணி நியமனம் இல்லாதாதால், வரும் 21ம் தேதி, குடும்பத்துடன் போராட்டம் நடத்த பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்படி, 2012, 2013, 2019ம் ஆண்டுகளில், ஆசிரியர் தேர்வாணையம் வாயிலாக, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கிடையில், 2018ல், தகுதி தேர்வு தேர்ச்சி மட்டும் போதாது, நியமன தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என, அ.தி.மு.க., அரசு அரசாணை வெளியிட்டது.

அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க, நியமன தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியதுடன், தங்கள் ஆட்சி அமைந்தால், நியமன தேர்வை ரத்து செய்து, அனைவருக்கும் பணி வழங்கப்படும் என்று, தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.

ஆனால், ஆட்சிக்கு வந்த பின், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிகம் இருப்பதால், நியமன தேர்வு நடத்துவதாகக் கூறி, 2023 அக்., 25ல், அறிவிப்பு வெளியிட்டு, 40,000 ஆசிரியர்களுக்கு, கடந்த ஆண்டு பிப்ரவரி, 4ல் நியமன தேர்வை தற்போதைய அரசு நடத்தியது.

அதில், தேர்வானோருக்கு, மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. ஜூலையில் உத்தேச மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு, 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.

உத்தேச தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு எட்டு மாதங்களாகியும், இதுவரை கலந்தாய்வோ, பணி நியமனமோ வழங்க வில்லை. எனவே, தேர்வானவர்கள் பணி நியமனத்தை வலியுறுத்தி, போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, கடலுாரை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் பார்த்தி கூறியதாவது:

போட்டி தேர்வு எழுதியவர்களில், 3,192 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு நவம்பருக்குள் பணி ஆணை வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், இதுவரை கலந்தாய்வும் நடத்தப்படவில்லை, பணியாணையும் வழங்கவில்லை. கடந்த, 10 ஆண்டுகளாக பணி நியமனம் இல்லாததாதல், எங்களில் பெரும்பாலானோர், 50 - 55 வயதை கடந்து விட்டனர்.

அரசு பணியை எதிர்பார்த்து, ஒவ்வொரு தேர்வாக எழுதி தேர்ச்சி பெற்றோம். அரசு உரிய பதில் அளிக்காததால், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.

இதனால், வரும் 21ம் தேதி, எங்கள் குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன், சென்னையில் போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments