Breaking News

90% பேர் புதுசுக்கு மாற்றிட்டா, பழைய வரிமுறைக்கு என்ன வேலை..!

 


வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும்போது, பழைய வரி மற்றும் புதிய புதிய வரி விதிப்பு முறைகளில் ஏதாவது ஒன்றை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். 2020ம் ஆண்டுக்கு பிறகு புதிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு தானாகவே புதிய வரி விதிப்பு தேர்வு செய்யப்படும். பழைய வரி விதிப்புக்கு மாறினால் ஆதாயம் என்று கருதுபவர்கள் பழைய வரி விதிப்பு முறையே தேர்வு செய்து கொள்ளலாம்.

மத்திய அரசு சமீபகாலமாக அனைத்து வரி செலுத்துவோரையும் புதிய வரி விதிப்புக்கு மாற்ற வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. மேலும் இதற்காக புதிய வரி விதிப்பில் பல்வேறு சலுகைகளை வழங்கி அனைவரையும் புதிய வரி விதிப்பிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது.

மத்திய அரசு அண்மையில் தாக்கல் செய்த 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பின்கீழ், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை என்றும், ரூ.12 லட்சத்துக்கும் மேல் உள்ள தனிநபர்களுக்கு வருமான வரி படிநிலைகள் மற்றும் விகிதங்கள் மாற்றியமைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் பெரும்பாலான வரி செலுத்துவோர் புதிய வரி விதிப்புக்கு மாறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ரவி அகர்வால் கூறுகையில், ரூ.12 லட்சம் வரை வரி இல்லை மற்றும் வரி சீரமைப்புகள் காரணமாக, வரி செலுத்துவோரில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் புதிய வரி விதிப்புக்கு மாற வழிவகுக்கும். தற்போது 75 சதவீதம் பேர் புதிய வரி விதிப்பில் தங்களது கணக்கை தாக்கல் செய்கின்றனர்.
வழக்கமான மனித நுண்ணறிவு சேகரிப்பு அமைப்பை தவிர, ஏஐயின் மேம்பட்ட பயன்பாட்டின் மூலம் நாட்டில் ஊடுருவாத வரி நிர்வாகத்தை உறுதி செய்வதே அரசாங்கத்தின் மற்றும் வருமான வரித் துறையின் தத்துவம் மற்றும் அணுகுமுறை.

சாமானிய வரி செலுத்துவோர் தங்கள் வருமான கணக்கை தாக்கல் செய்வதற்கான வரி செயல்முறைகள் மிகவும் சிக்கலானவை அல்ல. எளிமைப்படுத்தப்பட்ட ஐடிஆர்-1, முன்பே நிரப்பட்ட வருமான வரி கணக்கு மற்றும் டிடிஎஸின் தானியங்கி கணக்கீடு உள்ளிட்டவை அவர்களுக்கு உள்ளன. பழைய வரி முறையை போல எந்த விலக்குகளோ அல்லது கழிவுகளோ புதிய வரி விதிப்பில் அனுமதிக்கப்படவில்லை. புதிய வரி விதிப்பு முறை, வரி செலுத்துவோருக்கு எளிய கணக்கீடுகளை கொண்டுள்ளது. இதனால் வரி செலுத்துவோர் நிபுணர்கள் உதவியின்றி அவர்களே தங்கள் வருமான வரி கணக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.



 



No comments