Breaking News

Income Tax : மாற்றப்பட்ட வருமான வரி அடுக்கு.. யார் யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

 


New Tax Slab | கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், வருமான வரி அடுக்குகளில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, யார் யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது. இதில், வருமான வரி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறும் நபர்கள் எந்த வித வரியையும் செலுத்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. ரூ.12 லட்சத்திற்கு மேல் வருமான வரி செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வருமான வரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றத்தின் அடிப்படையில் யார் யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வருமான வரி அடுக்கில் மாற்றம் செய்த மத்திய அரசு

நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 8 வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில் சாமானிய மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் ஒரு சிறப்பு அறிவிப்பையும் வெளியிட்டார். அதாவது, ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்கள் எந்தவித வரியும் செலுத்த தேவையில்லை என அறிவித்தார். மேலும் ஆண்டு வருமான அடிப்படையிலான வருமான வரி விகிதங்களும் மாற்றி அமைக்கப்படுவதாக அறிவித்தார்.

வருமான வரி அடுக்கில் மாற்றம் செய்து அறிவித்த நிர்மலா சீதாராமன்

வருமான வரி அடுக்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த நிர்மலா சீதாராமன் கீழ் கண்ட வரி விகிதங்களை அறிவித்தார்.

  • 4 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்களுக்கு வரி இல்லை.
  • 4 லட்சம் முதல் 8 லட்சம் ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்களுக்கு 5 சதவீத வரி.
  • 8 லட்சம் முதல் 12 லட்சம் ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்களுக்கு 10 சதவீத வரி.
  • 12 லட்சம் முதல் 16 லட்சம் ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்களுக்கு 15 சதவீத வரி.
  • 16 லட்சம் முதல் 20 லட்சம் ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்களுக்கு 20 சதவீத வரி.
  • 20 லட்சம் முதல் 24 லட்சம் ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்களுக்கு 25 சதவீத வரி.

அதுவே ரூ.30 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்கள் என்றால் அவர்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

புதிய வரி அடுக்கு – யார் யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்

மத்திய அரசின் இந்த புதிய வரி அடுக்கில் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்கள் மட்டுமன்றி, அதற்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கும் சில சிறப்பு சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், புதிய வரி அடுக்கின் அடிப்படையில் யார் யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

வருமானம்  முன்பு  தற்போது  சேமிப்பு
ரூ.12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் ரூ. 83,200 0 ரூ.83,200
ரூ.15 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் ரூ.1,30,000 ரூ.97,500 ரூ.32,500
ரூ.20 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் ரூ.2,78,000 ரூ.1,92,400 ரூ.85,800
ரூ.25 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் ரூ.4,26,000 ரூ.3,12,000 ரூ.1,14,400

மேற்குறிப்பிட்ட விவரங்களின் அடிப்படையில் ரூ.12 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்கள் ரூ.1,14,400 வரை சேமிக்க முடியும்.

ரூ.4 லட்சம் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்

மத்திய பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்கள் வரி செலுத்த வேண்டிய அவசியல் இல்லை என கூறப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய தகவல் உள்ளது. அதாவது ரூ.4 லட்சம் வரை ஆண்டு வருமான ஈட்டும் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியது இல்லை. அவர்களுக்கு எந்த வித வருமான வரியும் விதிக்கப்படாது. ஆனால், ரூ.4 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் அவர்களுக்கு வரி பிடித்தம் செய்வதில் இருந்து வரி விலக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

No comments