எம்.பி.பி.எஸ் படிக்க ஃபீஸ் கம்மி; வேலூர் கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் அட்மிஷன் எப்படி?
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க ஆசையா? மேனேஜ்மெண்ட் கோட்டா விண்ணப்பப் பதிவு தொடக்கம்; இடங்களின் எண்ணிக்கை முதல் கட்டணம் வரை முழு விபரம் இங்கே
இந்திய அளவில் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றான கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் வேலூரில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்க்கை பெறுவது எப்படி? என்பதை இப்போது பார்ப்போம்.
பயாலஜி சிம்பிளிஃபைடு தமிழ் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவின்படி, தமிழகத்தின் வேலூரில் உள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. சி.எம்.சி கல்லூரியில் மொத்தம் 100 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில் 50% இடங்கள் தமிழ்நாடு கவுன்சலிங் மூலமும், 50% இடங்கள் மேனேஜ்மெண்ட் கோட்டா மூலமும் நிரப்பப்படும். இவற்றில் எந்த இடங்களில் சேர விரும்பினாலும் நீட் தேர்வில் தகுதி பெறுவது அவசியம்.
நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றாலும், சி.எம்.சி கல்லூரியில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேர விரும்புவர்கள் தற்போது பதிவு செய்துக் கொள்ள வேண்டும். அதாவது 50% மேனேஜ்மெண்ட் கோட்டாவில் எம்.பி.பி.எஸ் படிக்க விரும்புபவர்கள் சி.எம்.சி கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் இப்போதே பதிவு செய்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங் கமிட்டி மூலம் சேர விரும்புபவர்கள், தமிழ்நாடு கவுன்சலிங்கிற்கு விண்ணப்பித்தால் போதும்.
மேனேஜ்மெண்ட் கோட்டாவில் பொதுப் பிரிவினருக்கு 2 இடங்களும், சிறுபான்மையின பிரிவினருக்கு 38 இடங்களும், சி.எம்.சி ஊழியர்கள் கோட்டாவில் 10 இடங்களும் உள்ளன. தமிழ்நாடு கவுன்சலிங்கை பொறுத்தவரை 20 இடங்கள் கிறிஸ்தவ மைனாரிட்டிக்கும், 30 இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படும். மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேர விரும்புபவர்கள் சி.எம்.சி இணையதளத்திலும் தமிழ்நாடு கவுன்சலிங்கிற்கும் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டணத்தைத் பொறுத்தவரை எம்.பி.பி.எஸ் படிப்புக்கு முதலாம் ஆண்டிற்கு ரூ. 84,330 ஆகும். இந்த ஆண்டை விட 34,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 51 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டணத்தை செலுத்த வேண்டும். இதுதவிர விடுதி மற்றும் உணவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
No comments