Breaking News

இனி கவலை வேண்டாம்! பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன தமிழ்நாடு மின்சார வாரியம்!


இனி கவலை வேண்டாம்! பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன தமிழ்நாடு மின்சார வாரியம்!

தமிழகத்தில் 2024-25ம் ஆண்டிற்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிகல்வித்துறை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதியும்,  11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி மார்ச் 27ம் தேதியும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிவடைகிறது. பொதுத்தேர்வுக்கான பணிகளை அரசு தேர்வு இயக்கம் செய்து வருகிறது. 

செய்முறை தேர்வு

இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று முதல் தொடங்கி பிப்ரவரி 14ம்  தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையே மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் தடை செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

தமிழ்நாடு மின்சார வாரியம்

இந்நிலையில் 10,11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வையொட்டி தடையற்ற மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தடையற்ற மின்சாரம்

இது தொடர்பாக அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில்:10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான செய்முறை உள்ளிட்ட தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே, அனைத்து தேர்வு மையங்களிலும் தினமும் காலை 7 முதல் மாலை 5.30 வரை தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். தேர்வு மையத்துக்கு மின் விநியோகம் செய்யும் மின் மாற்றியை கண்காணிக்க அலுவலர்களை நியமிக்க வேண்டும். 

செயற்பொறியாளர் ஆய்வு

ஒவ்வொரு 5 மையங்களுக்கும் அவசர காலங்களில் உதவும் வகையில் களப்பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும். பள்ளி அதிகாரிகளுடன் இணைந்து செயற்பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் தலைமையாசிரியர்கள் அவசர காலங்களில் தொடர்பு கொள்ளும் வகையில் துறை சார்ந்த பணியாளர், அதிகாரிகளின் எண்களை அவர்களிடம் வழங்க வேண்டும். 

தேர்வு நேரத்தில் பராமரிப்புக்கான மின்தடை செய்யக்கூடாது

தேர்வு நேரத்தில் பராமரிப்புக்கான மின்தடை செய்யக்கூடாது. மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக இரவு நேரங்களிலும் மின்தடை செய்யக் கூடாது. இவ்வாறான அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவது தொடர்பாக நாள்தோறும் மண்டல தலைமைப் பொறியாளர்கள் தலைமையகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments