10-ஆம் வகுப்பு கணித்தேர்வு -மாணவர்களின் சோகமும் -நடத்திய ஆசிரியர்களின் ஆதங்கமும் :
இன்று பத்தாம் வகுப்பு கணக்குத் தேர்வினை எழுதிய மாணவர்கள் இதற்கு முன்பு எட்டாம் வகுப்பில் இரண்டாம் பருவத் தேர்வினை எழுதி விட்டு, ஒன்பதாம் வகுப்பில் எந்தத் தேர்வையும் எழுதாமல் பத்தாம் வகுப்பிற்கு வந்தவர்கள்.
காலாண்டு, அரையாண்டு என்றவாறு இல்லாமல் முதல் மற்றும் இரண்டாம் திருப்புத் தேர்வு என்றவாறு எழுதி விட்டு முதன் முறையாக அரசுப் பொதுத் தேர்வினை எழுத வந்தவர்கள்.
ஒரு தேர்வு வினாத்தாள் பலதரப்பட்ட மாணவர்களுக்கும் தகுந்தாற் போல தயாரிக்கப்பட வேண்டும்.
நல்ல வினாத்தாளினைத் தயாரிப்பது எவ்வாறு என்று ஆசிரியர் பயிற்சி பயிலும் போது ஒழுங்காகப் படித்து விட்டு வந்திருந்தால் மட்டுமே அவ்வாறான ஒரு வினாத்தாளினைத் தயாரிக்க முடியும்.
மெதுவாகக் கற்போர், சராசரியாகப் பயில்வோர், மீத்திறன் பெற்றவர் என்றவாறு உள்ள முத்தரப்பினரும் எழுதுவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் அமைவதே நல்ல வினாத்தாளாகும்.
பாடநூலினை முழுமையாகப் படித்தவருடைய திறனை மட்டுமே மதிப்பிடுவதாக அமைவதா ஓர் அரசுப் பொதுத்தேர்வு.
இலட்சக்கணக்கில் தேர்வெழுதுவோரில் இருந்து சில நூறு பேர்களை மட்டுமே உயர்கல்விக்குத் தேர்வு செய்யும் நுழைவுத் தேர்வா இது? அல்லது ஆயிரக்கணக்கான நபர்களில் இருந்து பத்து இருபது நபர்களை பணிக்கு தேர்வு செய்யும் தகுதித் தேர்வா இது?
ஒரு வகுப்பில் இருந்து குறைந்தபட்ச கற்றல் அடைவுகளைப் பெற்ற மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு அனுப்ப தேர்வு செய்யும் பொதுத் தேர்வு தானே?
தேர்வெழுதும் மாணவர்கள் நம்முடைய பிள்ளைகள் தாமே? அவர்கள் ஒன்றும் எதிரிகள் அல்லரே...
பிறகு எதற்காகத் திட்டமிட்டு பழிவாங்குவதைப் போல் தேடித் தேடிப் பொறுக்கி எடுத்து இத்தகைய வினாக்களைத் தேர்ந்தெடுத்தீர் நண்பர்களே...!
கட்டாயமாக எழுத வேண்டிய வினாவினை பாடநூலில் இல்லாத புதிதாகத் தயாரிக்கப்பட்ட வினாவாக இருக்கும் வகையில் கேட்டுள்ளீர்கள். இத்தகைய பழிவாங்கும் நோக்கில் இருமுனைத் தாக்குதல் நடத்தும் அளவுக்கு நம்முடைய குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள் நண்பர்களே...!
வழங்கப்பட்டுள்ள பாடப்பகுதி முழுவதும் பரவியும் விரவியும் வருகின்ற வகையில் அல்லவா வினாக்கள் இருக்க வேண்டும். அதை விடுத்து கடினப் பகுதிகளாகவே பார்த்துப் பார்த்து எடுத்து கணக்கு என்றாலே வெறுப்பினைத் தோற்றுவிக்க வேண்டிய அவசியம் என்ன நண்பர்களே...!
மற்ற பணிகளை விடுத்து பள்ளிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள... அவ்வாறு பள்ளிக்குச் சென்றாலும் தவிர்க்காமல் வகுப்பறைக்குச் சென்று மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஆசிரியர் ஒருவர் இத்தகைய வினாத்தாளினை ஒருபோதும் எடுக்கமாட்டார்.
அடுத்த ஆண்டிலாவது அப்படி ஒருவர் எடுக்கட்டும் என்று வேண்டிக் கொள்வோம்.
~ தகடூர் ப.அறிவொளி.
No comments