Breaking News

ரூ.1000 கல்வி உதவி தொகை திட்டம் மாணவியர் பட்டியல் சேகரிப்பு.

தமிழக அரசின், 1,000 ரூபாய் கல்வி உதவித் தொகை பெறும் திட்டத்துக்கு, கல்லுாரிகளில் படிக்கும் அரசு பள்ளி மாணவியரின் பட்டியல் சேகரிக்கும் பணி துவங்கி உள்ளது.

தமிழக அரசின் மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என, சமீபத்தில் மாற்றப்பட்டது. இதன்படி, தமிழக கல்லுாரிகளில் பட்டப் படிப்பு, டிப்ளமா மற்றும் தொழிற்பயிற்சி படிக்கும் மாணவியரில், அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த திட்டத்தில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, அரசு பள்ளிகளில் படித்த மாணவியருக்கு, அவர்களின் படிப்பு முடியும் வரை, மாதம் 1,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான மாணவியர் பட்டியல் சேகரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.

அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் படிக்கும் மாணவியரில், அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தோரின் விபரங்களை அனுப்புமாறு, இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, உயர்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.புதிய கல்வி ஆண்டில் கல்லுாரிகள் திறந்ததும், உதவித் தொகை வழங்கும் பணி துவங்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments