இளநிலை, முதுநிலை படித்தவர்கள் முதல்வர் புத்தாய்வு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்: ஊக்கத்தொகையாக மாதம் 75 ஆயிரம் வழங்கப்படும்; அரசு அறிவிப்பு
இளநிலை, முதுநிலை படித்தவர்கள் முதல்வர் புத்தாய்வுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் 75 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:
முதல்வர் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் தொழில்முறை, கல்விப் பின்னணி அடிப்படையில் தகுதியான இளம் வல்லுநர்களை தேர்வு செய்து ஊக்க ஊதியத்துடன் 2 ஆண்டுகள் புத்தாய்வு பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் மாநில அரசின் முதன்மை மற்றும் முன்னுரிமை திட்டங்களை செயல்படுத்துவதில் நேரடியாக ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும், முதல்வர் அலுவலகம், சம்பந்தப்பட்ட துறைகளின் வழிகாட்டுதலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொள்வார்கள்.
இதில், ஒரு துறைக்கு 2 பேர் வீதம் 24 பேரும், சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் கண்காணிப்பு மையத்துக்கு 6 பேரும் என 30 இளம் வல்லுநர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் ஆகியவற்றில் முதல்வகுப்பு தேர்ச்சியுடன் இளநிலை பட்டம் பெற்றவராகவோ அல்லது கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணபிக்கலாம். தமிழ் மொழி அறிவு கட்டாயமாகும்.விண்ணப்பதாரர்கள் 22 முதல் 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயது வரையும், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 33 வயது வரையும் தளர்வு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு, திருச்சி பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது. ஆன்லைன் தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழில் நடத்தப்படும்.
தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.65 ஆயிரம் ஊக்கத் தொகை மற்றும் போக்குவரத்து, தொலைபேசி, இணைய வசதி ஆகியவற்றுக்காக ரூ.10 ஆயிரம் அலவன்சு என மொத்தம் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.tn.gov.in/tncmfp அல்லது www.bim.edu/tncmfp என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பபதிவு நேற்று தொடங்கியது. வருகிற ஜூன் 10ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments