பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.11.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் :தீ நட்பு
குறள் எண்:811
பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது.
பொருள்:அன்பு மிகுதியால் பருகுவார்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின்
நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.
பழமொழி :
அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை
Distance lends enchantment to the view
இரண்டொழுக்க பண்புகள் :
*மனித நேயத்தை விட்டு விடாமல் சகோதரப் பண்புடன் அனைவரிடமும் பழகுவேன்.
* விட்டுக் கொடுப்பதால் பிரச்சினைகள் வராமல் தடுக்க முடியும். எனவே நான் பிறருக்கு விட்டுக் கொடுப்பேன்.
பொன்மொழி :
மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது. - சுப்பிரமணிய பாரதியார்
பொது அறிவு :
1. கடலின் அழுத்தை அளவிடப் பயன்படும் கருவி
விடை: சோனார்.
2. மிகக் குறைந்த செலவில் மின்னாற்றலைப் பெறும் முறை
விடை : நீர் ஆற்றல்
English words & meanings :
Ginger-இஞ்சி,
Cardamom-ஏலக்காய்
வேளாண்மையும் வாழ்வும் :
பூச்சிகள் மற்றும் தாவர நோய்களைக் கட்டுப்படுத்த உபயோகிக்கப்படும் ஊடு பயிரும் பயிர்களுக்கு கிடைக்கும் வகையில் உள்ள தழைச் சத்தை மண்ணில் அதிகரிக்கும்.
நவம்பர் 12 இன்று
உலக நுரையீரல் அழற்சி நாள்
உலக நுரையீரல் அழற்சி நாள் (World Pneumonia Day) என்பது நுரையீரல் அழற்சி நோய் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில் ஆண்டு தோறும் நவம்பர் 12 ஆம் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும். சிறுவர்களின் நலனைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நூற்றுக்கும் அதிகமான உலகளாவிய அமைப்புகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு நவம்பர் 2 இல் முதலாவது உலக நுரையீரல் அழற்சி நாளை கொண்டாடின. 2010 முதல் இது நவம்பர் 12 ஆம் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகளாவிய அளவில் நியூமோனியா நோய் தாக்கத்தால் ஆண்டுக்கு சராசரியாக 1.6 மில்லியன் பேர் இறக்கின்றனர். 5 வயதிற்கும் குறைந்த 155 மில்லியன் குழந்தைகள் பாதிப்படைகின்றனர். இது எயிட்சு, மலேரியா, எலும்புருக்கி நோய் போன்றவற்றினால் இறப்பு ஏற்படுவதை விட அதிகம் என மருத்துவ சங்க குறிப்பு தெரிவிக்கின்றது.
சலிம் அலி அவர்களின் பிறந்தநாள்...
சலிம் அலி (Sálim Ali; நவம்பர் 12, 1896 – சூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சலிம் அலியின் முழுப்பெயர் சலிம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும்.இவர் இந்தியாவில் முதன்முதலில்பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர். இவர் பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தின் (Bombay Natural History Society) புரவலராக (patron) விளங்கியவர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.
சலிம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமன்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டவர்; பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப்பிணைந்தவை என்ற சூழியல்சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
“இந்திய, பாகிஸ்தான் நாட்டுப் பறவைகளின் கையேடு (Handbook of the Birds of India and Pakistan) மற்றும் தன்வரலாற்று நூலான ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of Sparrow) ஆகிய நூல்கள் சலிம் அலியின் முக்கிய நூல்களாகும்.
நீதிக்கதை
ரகசியம்
ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அந்த துறவிக்கு யார் என்ன அவமானப்படுத்தினாலும் கோபமே வராது. அவருடைய சிஷ்யருக்கு அந்த ரகசியத்தை அறிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தார்.
ஒருநாள் குருவிடம் சென்று, குருவே! யார் என்ன அவமானப்படுத்தினாலும் தங்களுக்கு கோபமே வருவதில்லையே ஏன்? அந்த ரகசியம் என்ன என்னிடம் கூறுங்கள்" என்று கேட்டார்.
அதற்கு குரு, " ஏரியில் உள்ள காலியான படகில் அமர்ந்து தியானம் செய்வது என்னுடைய வழக்கம்.ஒரு நாள் அவ்வாறு தியானம் செய்யும்பொழுது என்னுடைய படகை மற்றொரு படகு வந்து முட்டியது.
இப்படி யார் அஜாக்கிரதையாக வந்து முட்டியது? என்று மிகவும் கோபத்துடன் கண்களைத் திறந்து பார்த்தால், அது வெற்று படகு. காற்றினால் அசைந்து அசைந்து வந்து என்னுடைய படகின் மீது முட்டி இருக்கிறது.என் கோபத்தினை அந்த வெற்று படகின் மீது காட்டி என்ன பயன்?
அதுபோல் தற்போது என்னை யாராவது கோபப்படுத்தினால் அந்த வெற்றுப் படகின் ஞாபகம் தான் எனக்கு வரும்.இதுவும் வெற்று படகு தான் என்று அமைதியாக இருந்து விடுவேன்". என்று தனது ரகசியத்தை விளக்கிக் கூறினார்.
இன்றைய செய்திகள் - 12.11.2024
*மனித வள மேம்பாட்டுத் துறை செயலராக சமயமூர்த்தி, குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் துறை செயலராக அதுல் ஆனந்த் என தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் நவம்பர் 17 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* இஸ்ரோவுடன் இணைந்து விண்கலம் மற்றும் ஏவுவாகன வெப்ப மேலாண்மை தொடர்பான ஆராய்ச்சி மையத்தை தொடங்க இருப்பதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
* அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசி உக்ரைன் போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என வலியுறுத்தியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
* ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; இன்றைய ஆட்டத்தில் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்திய ஜன்னிக் சின்னெர்.
* மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்.
Today's Headlines
* Six IAS officers have been transferred to Tamil Nadu, namely Samayamurthy as Secretary of the Human Resource Development Department and Atul Anand as Secretary of the Micro and Small Medium Enterprises Department.
* The Chennai Meteorological Department has said heavy rain in Tamil Nadu is possible until November 17.
* IIT Chennai has announced that it plans to start a research center on spacecraft and launch vehicle thermal management in collaboration with ISRO.
* Donald Trump, who won the US presidential election, spoke to Russian President Vladimir Putin on the phone and urged him not to escalate the war in Ukraine, US media reported.
* Men's Tennis Championship; Jannik Sinner beat Alex De Minar in today's match.
* The women's Asian Champions Cup hockey tournament starts today.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments