Breaking News

தேர்தல் பணிக்கு மதிப்பூதியம் ரூ.171.89 கோடி அரசு விடுவிப்பு

 


தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு மதிப்பூதியம் வழங்க, 171 கோடியே, 89 லட்சத்து, 11,407 ரூபாயை, தமிழக அரசு விடுவித்துள்ளது.லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப்., 19ல் நடந்து, ஜூன் 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, ஓட்டுகள் எண்ணப்பட்ட நாள் வரை தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு வழக்கமாக மதிப்பூதியம் வழங்கப்படும். ஐந்து மாதங்களாகியும் இத்தொகை வழங்கப்படவில்லை. இதேபோல், தேர்தல் பணிக்கான செலவின தொகையும் விடுவிக்கப்படாமல் இருந்தது.இதுதொடர்பாக, அக்., 19ல் நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, தேர்தல் செலவினத்துக்கான தொகை மட்டும் வழங்கப்பட்டது.

மதிப்பூதியம் வழங்க இரு மாதங்களாகும் என, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகை செலவுக்கு பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த தேர்தல் பிரிவு அலுவலர்கள் சோகமாகினர்.தமிழக தலைமை தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டதும், தேர்தல் தொடர்பான பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. மதிப்பூதியம் வழங்காமல் இருப்பது அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அத்தொகை உடனடியாக விடுவிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் எண்ணிக்கைக்கேற்ப சமர்ப்பிக்கப்பட்ட கேட்பு பட்டியல் சரிபார்க்கப்பட்டு, நிதி வழங்கப்பட்டுள்ளது.மொத்தம், 171 கோடியே, 89 லட்சத்து, 11,407 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், சென்னைக்கு, 10.12 கோடி, மதுரைக்கு 8.06 கோடி, கோவைக்கு, 7.84 கோடி, திருப்பூருக்கு, 5.61 கோடி, நீலகிரிக்கு 1.98 கோடி ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் பதவி மற்றும் பணியிடத்துக்கு ஏற்ப, 5,000 ரூபாய் முதல் 33,000 ரூபாய் வரை மதிப்பூதியம் கிடைக்கும். நிதி ஒதுக்கி, அரசாணை வெளியாகி விட்டதால், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments