குரூப் 4 தேர்வு எழுதிய தேர்வர்கள் இணையவழியில் பெறப்படாத வகுப்பு சான்றிதழை பதிவேற்றம் செய்யலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு:
குரூப் 4 தேர்வு எழுதிய தேர்வர்கள் இணையவழியில் பெறப்படாத வகுப்பு சான்றிதழை பதிவேற்றம் செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 எழுத்து தேர்வு முடிவை கடந்த 28ம் தேதி வெளியிட்டது. தேர்வர்கள் இத்தேர்வில் பெற்ற மதிப்பெண், அவர்களின் ஒட்டுமொத்த தரவரிசை, இனசுழற்சிக்கான தரவரிசை மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான தரவரிசை ஆகியவையும் வெளியிடப்பட்டது.
தரவரிசை, இணையவழி விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், உரிமைக்கோரல்கள் மற்றும் நியமன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில், தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்க்கும் நிலைக்கு தேர்வு செய்யப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்வர்கள் இணையவழியில் பெறப்படாத வகுப்பு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாமா? என்று டிஎன்பிஎஸ்சியிடம் கேள்வி கேட்டு இருந்தனர்.
இதற்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. அதில், "தேர்வர்கள் இணையவழியில் பெறப்படாத வகுப்பு சான்றிதழை பதிவேற்றம் செய்யலாம்" என்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வகுப்பு சான்றிதழில் தேர்வரின் பெயர், தேர்வரின் தந்ைத பெயர் தவறாக இருப்பின் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்று தேர்வர்கள் கேள்வி கேட்டு இருந்தனர். இதற்கு டிஎன்பிஎஸ்சி, "வகுப்பு சான்றிதழில் தேர்வரின் பெயர், தேர்வரின் தந்தை பெயர் தவறாக இருப்பின் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது" என்று தெரிவித்துள்ளது.
No comments