செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் அதிரடி.. சுகன்யா சம்ரிதி யோஜனாவின் ஸ்பெஷல் முகாம்.. எங்கேன்னு பாருங்க :
தமிழ்நாட்டின் அஞ்சலகங்களில் செல்வ மகன், செல்வ மகள் சேமிப்பு
திட்டங்களில் சேர நவம்பர் 30வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.. இதையொட்டி
அந்தந்த மாவட்டத்தின் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்கள் முக்கிய அறிவிப்பு
ஒன்றினை பொதுமக்களுக்கு விடுத்திருக்கிறார்கள்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டமானது,
பெண் குழந்தைகளின் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசால்
அமல்படுத்தப்பட்டதாகும். பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான
நிதிப்பாதுகாப்பை இந்த திட்டம் தொடர்ந்து வழங்கி வருகிறது.
பெண் குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த
திட்டத்தில், குறைந்தபட்ச தொகையாக ஒரு நிதியாண்டிற்கு 250 ரூபாய் முதல்,
அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். 15 வருடத்திற்கு
பணத்தை டெபாசிட் செய்யலாம். 21 வருடங்கள் கழித்து அல்லது 18 வயதை அடைந்த
பிறகு இந்த திட்டம் முதிர்ச்சியடைந்துவிடும்.. 18 வயதை எட்டியதுமே,
அவர்களின் கல்வி செலவுக்கு இந்த முதலீட்டிலிருந்து பாதி தொகையை
எடுத்துக்கொள்ளலாம்.
கடந்த 2022-23-ம் நிதியாண்டில் மட்டும் நம்முடைய தமிழ்நாட்டில் 32.57
லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டன.. இதன் மூலம் அகில இந்திய அளவில்
2வது இடத்தை இந்த திட்டம் பிடித்திருக்கிறது. முதலீடு மற்றும் வட்டிக்கு
100% பாதுகாப்பு என்பதுடன், அதிக வட்டி கிடைக்கிறது என்பதால் தமிழக
மக்களின் ஏகோபித்த ஆதரவையும் இந்த செல்வமகள் திட்டம் பெற்றுவருகிறது.
சிறப்பு முகாம்கள்: இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து அஞ்சலகங்களிலும்
செல்வ மகள், செல்வ மகன் சேமிப்புத் திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கு
சிறப்பு முகாம் நடைபெறுகின்றன.. கடந்த 14ம் தேதி, குழந்தைகள் தினத்தை
முன்னிட்டு, இந்த சிறப்பு முகாம்கள் மாவட்டங்களில் நடத்தப்பட்டு
வருகின்றன.. வருகிற நவம்பர் 30ம் தேதி வரை செல்வ மகள், செல்வ மகன்
சேமிப்புத் திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தேனி, சேலம், ராமநாதபுரம் உள்ளிட்ட அஞ்சல் கோட்ட
கண்காணிப்பாளா்கள் தங்கள் மாவட்ட மக்களுக்காக முக்கிய அறிவிப்புகளையும்
வெளியிட்டு வருகிறார்கள்.
தேனி கோட்டம்: தேனி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் குமரன் இதுகுறித்த
அறிவிப்பில், "மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை, கிளை அஞ்சலகங்களில்
வருகிற 30-ம் தேதி வரை செல்வ மகள், செல்வ மகன் சேமிப்புத் திட்டங்களில்
கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்தத் திட்டத்தில் பொதுமக்கள்
தங்களது 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் பெயரில் சேமிப்புக் கணக்கு
தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி கணக்கு தொடங்க வேண்டும்.
கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்கு வைப்புத் தொகை செலுத்த
வேண்டும். சேமிப்புத் தொகையில் 50 சதவீதத்தை குழந்தையின் உயா் கல்விக்காக
திரும்பப் பெறலாம். சேமிப்புத் தொகைக்கான வட்டி, முதிா்வுத் தொகைக்கு
வருமான வரி விலக்கு அளிக்கப்படும். சேமிப்புக் கணக்கு தொடங்கிய மகன் அல்லது
மகளின் திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு கணக்கை முடித்துக் கொண்டு
முதிா்வுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.
பொன்மகன் சேமிப்பு: சேலம் கிழக்கு கோட்டத்துக்குட்பட்ட அனைத்து
அஞ்சலகங்களிலும் வருகிற 30ம் தேதி வரை செல்வ மகள் மற்றும் பொன் மகன்
சேமிப்பு திட்டத்தின் கீழ் கணக்குகள் தொடங்க சிறப்பு முகாம் நடக்கிறது.
பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி தங்களது குழந்தைகளுக்கு பொன்னான
எதிர்காலத்தை உருவாக்கிட இந்த சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கி
சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை, கிளை தபால்
நிலையங்களில் நவ.30 வரை செல்வ மகள், பொன் மகன் சேமிப்பு திட்ட கணக்கு
துவங்க சிறப்பு முகாம் நடக்கிறது. வட்டி, முதிர்வு தொகைக்கு வருமான வரி
விலக்கு உண்டு என்பதால், குறைந்த பட்சம் ரூ.500 உடன் செல்வ மகன்
திட்டத்தில் கணக்கு துவங்கலாம் என்றும், இந்த வாய்ப்பினை பொது மக்கள்
பயன்படுத்தி பயன் பெறலாம் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தைக்கு ஆதரவாக வருடத்துக்கு
ரூ. 1.5 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு வரி வசூலிக்கப்படுவதில்லை...
வருமான வரித் துறையின் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை விலக்கு
கிடைக்கும். ரூ.1.5 லட்சத்தை 15 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் மொத்த தொகை
ரூ.22,50,000 ஆகும். 8.2 சதவீத வட்டியில் 46,77,578 ரூபாய் கிடைக்கும்.
அதாவது ஒரு பெண் 21 வயதை அடைந்தால் அவருக்கு மொத்தம் ரூ. 69,27,578
கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments