கோவில் விழாவுக்கு வராவிட்டால் மதிப்பெண் கிடையாது.. மாணவிகளை மிரட்டிய சென்னை கல்லூரி பேராசிரியை
விழாவில் பங்கேற்காவிட்டால் மதிப்பெண்ணை வெளியிடமாட்டார்கள். பின்விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும் என்று கோவில் விழாவில் பங்கேற்க மறுத்த மாணவிகளை சென்னை கல்லூரி பேராசிரியை மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தில் சாரதாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவில் கர்நாடகா சிருங்கேரி மடத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்கும்படி கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கல்லூரியையொட்டி உள்ள கோவில் என்பதாலும், விழா கல்லூரி வளாகத்தில் நடப்பதாலும் மாணவிகள் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் கல்லூரி மாணவிகள் பலர் விழாவில் பங்கேற்க விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. விழா என்பது மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதனால் விழா முடிந்து வீட்டுக்கு செல்ல நேரம் ஆகும் என்பதால் மாணவிகள் பங்கேற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் மாணவிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால் மதிப்பெண்ணை வெளியிடமாட்டார்கள். பின்விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று பேராசிரியை ஒருவர் மிரட்டல் விடுத்த ஆடியோ சர்ச்சையாகி உள்ளது.
அதாவது கல்லூரி மாணவிகள் விழாவில் பங்கேற்க விரும்பாதது அறிந்த பேராசிரியை மாணவிகள் உள்ள வாட்ஸ்அப் குழுவில் ஆடியோவை பகிர்ந்துள்ளார். அந்த ஆடியோவில், ''குட் ஈவினிங் கேர்ள்ஸ். நாளைக்கு மாலை 3 மணிக்கு எல்லாரும் அசெம்பிள் ஆக வேண்டும். அட்டென்டென்ஸ் சீட்டில் அட்டென்டென்ஸ் எடுப்போம். எம்எஸ் ஆடிட்டோரியத்தில் அசெம்பிள் ஆக வேண்டும். இதனை செயலாளர் ரொம்ப் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி இருக்காங்க. லேட்டாகும் என்பதால் உங்களின் பெற்றோரை வந்து கூட பிக்அப் செய்து கொள்ள சொல்லலாம்.
நீங்கள் வரவில்லை என்றால் ஒரு கேர்ஸ் கூட வரவில்லை என்றால் ரிசல்ட்டை வெளியே விடமாட்டார்கள். நீங்களே டிசைட் பண்ணிக்கோங்க என்ன செய்ய வேண்டும் என்று. என்னால் ஒன்றுமே பண்ண முடியாது. ஏன் இந்த கிளாஸ் வரவில்லை என்று கேட்டால் யாருக்குமே விருப்பம் இல்லை என்று நான் சொல்லிவிடுவேன்.
என்னைக்கோ ஒருநாள் தானே இந்த மாதிரி கொஞ்சம் வெயிட் பண்ண சொல்றாங்க. அந்த ஒருநாள் கூட கல்லூரிக்காக Volunteer பண்ணலைனா. அப்புறம் இந்த கல்லூரியில் நீங்கள் படித்து என்ன பிரயோஜனம். கிறிஸ்தவ, முஸ்லிம்மா இருந்தா கூட நான் புரிந்து கொள்வேன். இந்துவாக இருந்து கொண்டு வர முடியாது என்று சொன்னீர்கள் என்றால் நாளைக்கு அதற்கான பின்விளைவுகளை சந்தித்து தான் ஆக வேண்டும்'' என கூறுகிறார். இதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
No comments