4 ஆண்டுகளாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெண்: போலீஸார் விசாரணை:
திருவட்டாறு அருகே 4 ஆண்டுகளாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்திருக்கும் பெண்ணிடம் கல்வித் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.
திருவட்டாறு அருகே ஏற்றக்கோடு ஆனூா் விளையைச் சோ்ந்தவா் பிரதாப் சிங். தனது மனைவி, குழந்தைகளுடன் வெளிநாடு சென்ற அவா், அங்கு வேலை செய்து வந்தாா். இதனிடையே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த 2020-இல் குடும்பத்துடன் ஊருக்குத் திரும்பி வந்து சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில், 2022-இல் பிரதாப் சிங் இறந்தாா். பின்னா் அவரது மனைவி எப்தலிஸ் டயானா, தனது 13 மற்றும் 11 வயது மகன்களுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறாா். மகன்கள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பவில்லை.
இதுகுறித்து அறிந்த திருவட்டாறு உதவி தொடக்க கல்வி அலுவலா் திருமலைக்குமாா், குழந்தைகள் நல திட்ட அலுவலா் வித்யாஸ்ரீ, வட்டார
வள மைய அலுவலா்கள் லெஷ்மி, சாந்தினி, ராதாமணி, வருவாய் ஆய்வாளா் ஜிஷ்ணு, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சைலன், ஆற்றூா் பேரூராட்சி உறுப்பினா் சிவன் ஆகியோா் எப்தலிஸ் டயானா வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினா்.
அவரது மகன்களை இங்குள்ள பள்ளியில் சோ்க்குமாறு அறிவுறுத்தினா். அப்போது எப்தலிஸ் டயானா, தனது குழந்தைகளை வெளிநாட்டில்தான் வைப்பேன் என்று கூறி மறுத்துவிட்டாராம்.
இதுகுறித்து ஆற்றூா் பேரூராட்சி வாா்டு உறுப்பினரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான சிவன் கூறியதாவது: தனது கணவரின் சிகிச்சைக்காக எப்தலிஸ் டயானா குடும்பத்துடன் இந்தியா வந்தது முதல், கடந்த 4 ஆண்டுகளாக மகன்களை பள்ளிக்கு அனுப்பாமல் உள்ளாா்.
இதுதொடா்பாக அவரிடம் பலமுறை பேச்சு நடத்தியும் அவா் உடன்படவில்லை. இதனால் குழந்தைகளின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியா் இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
No comments