Breaking News

வருகிறது வங்கக்கடல் "ராசா".. இன்று உருவாகும் தாழ்வு பகுதி புயலாக மாறுமா? 6 முக்கியமான விஷயங்கள்:

 


வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது.

காற்றழுத்த தாழ்வு காரணமாக 6 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மற்றும் புதுக்கோட்டையில் இடங்களில் கனமழை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யவாய்ப்புள்ளது.

இந்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்று இங்கே பார்க்கலாம்.

பொதுவாக புயல் உருவாவது எப்படி?; பொதுவாக ஒரு சுழற்சி கடலுக்கு மேலே இருக்க வேண்டும். இது வெப்ப நிலை காரணமாக வலிமை அடைந்து தாழ்வு மண்டலமாக மாறும்.

1, இந்த தாழ்வு மண்டலம் வலிமை அடைந்து புயல் ஏற்பட கடலின் மேல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும்.

2, அல்லது காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையத்தில் இதை விட அதிக வெப்பநிலை இருக்க வேண்டும். அந்த வெப்பநிலை இருந்தால் மட்டுமே புயலுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். தற்போது கோடைகாலம் என்பதால் இந்த சூழ்நிலை சரியாக உள்ளது.

3. அதேபோல் கடலுக்கு நடுவே.. நிலத்தில் இருந்து இன்னும் நீண்ட தூரத்தில் இருந்தால் கண்டிப்பாக இது புயலாக மாறும். எவ்வளவுக்கு எவ்வளவு பூமியில் இருந்து தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் அது முழுதாக உருவாக முடியும்.

4. ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் பூமிக்கு அருகில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இது முழுமையாக உருவாகும் முன் அது கரையை கடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் பல தாழ்வு மண்டலங்கள் புயலாக மாறாமல் போய் இருக்கின்றன.

5. அதேபோல் இன்னொரு விஷயம் வறண்ட காற்று. இந்த வறண்ட காற்று பொதுவாக தாழ்வு மண்டலம் உருவாக விடாமல் தடுக்கும். வறண்ட காற்று காரணமாக தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை இழக்கும். குளிர்ந்த காற்று இருந்தால் தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடையும்.

6.வறண்ட காற்று என்பது தாழ்வு மண்டலத்தை செயல் இழக்க செய்யும், ஆக்ரோஷத்தை குறைக்கும் ஒன்றாகும். இப்போது கோடைகாலம் என்றாலும் கடந்த வாரம் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வந்த குளிர்ந்த காற்று புயலுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.

இந்த விஷயங்கள்தான் பொதுவாக ஒரு புயல் உருவாவதற்கான சூழ்நிலையை தீர்மானிக்கும். இந்த விஷயங்கள் சாதகமாக அமைந்தால் புயல் உருவாவதற்கான ஏற்ற சூழ்நிலைகள் இருக்கும். வங்கக்கடலில் இதில் பெரும்பாலான விஷயங்கள் தற்போது புயலுக்கு சாதகமாக உள்ளது. மற்ற விஷயங்கள் தாழ்வு மண்டலம் உருவான பின்பே தெரியும்.

இதனால் புயல் உருவாகுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.


No comments