Breaking News

11, 12ம் வகுப்பு மாணவர்கள் சென்னை ஐஐடியில் பிஎஸ்சி சேரலாம் - விண்ணப்பிப்பது எப்படி?

IIT MADRAS Online  Course: 2022 கல்வியாண்டிற்கான இணைய வழி  நிரலாக்கல் (Programming), தரவு அறிவியலுக்கான (Data Science) இளநிலைப் பட்டப்படிப்புகான  ( (B.Sc) ஆட்சேர்ப்பு அறிவிப்பை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது. 2022 மே மாதம் 11 ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களும், பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மானவர்களும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆர்வமுள்ளவர்கள் வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். தகுதித் தேர்வுக்கு ரூ. 3000 கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணபித்த அனைத்து மாணவர்களுக்கு 4 பாடங்களில் (கணிதம், ஆங்கிலம், புள்ளிவிவரம் மற்றும் கணக்கீட்டு சிந்தனை) 4 வார பாடநெறி உள்ளடக்கம் உடனடியாக அனுப்பிவைக்கப்படும்.  இந்த மாணவர்கள் இணையத்தில் பாட விரிவுரைகளைக் கற்பதுடன், இணையத்தின் வாயிலாகவே தங்கள் கல்விப் பணிகளை சமர்ப்பிப்பார்கள்.

மேலும் 4 வாரங்களின் முடிவில் (வரும் மே மாதம் ) தகுதித் தேர்வை எழுதுவார்கள். 50 சதவீதத் தேர்ச்சியுடன் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களும் அடிப்படைப் பட்டத்திற்குப் (foundation programme) பதிவு செய்யத் தகுதியுடையவர்கள். ஐ.ஐ.டி.களின் வழக்கமான சேர்க்கை செயல்முறைகளை போல்லாமல் தேர்ச்சிப் பெறும் அனைத்து மாணவர்களுக்கும்  இதில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

12ம் வகுப்பு முடித்த பிறகு, மாணவர்கள் பிஎஸ்சி  அடிப்படை பட்டப்படைப்பைத்   (Foundation programme) தொடரலாம்.       

அதுமட்டுமல்லாமல் பட்டதாரிகள், பணிபுரியும் தொழில் வல்லுநர்களும் கூட பட்டப்படிப்பில் இணையலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த இணையவழி படிப்பிற்கு வயது தடையில்லை. திறமையான நிபுணர்களுக்குப் பெரும் தேவை உள்ள தரவு அறிவியலில் உலகத் தரம் வாய்ந்த பாடத்திட்டத்தை எளிமையாக அணுக வழி வகுக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையவழிப் பட்டப்படிப்பு மூன்று வெவ்வேறு நிலைகளில் வழங்கப்படும் – அடிப்படை பட்டம் (Foundation programme), டிப்ளமோ பட்டம் (Diploma programme), இளநிலைப் பட்டப்படிப்பு (Degree Programme). இந்தப் பட்டப்படிப்பின் மூன்று நிலைகளில் எந்தவொரு கட்டத்திலும் வெளியேறும் சுதந்திரம் உண்டு. அவ்வாறு வெளியேறும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி மெட்ராஸிலிருந்து முறையே அடிப்படைச் சான்றிதழ், டிப்ளோமா சான்றிதழ் அல்லது இளநிலைப் பட்டப்படிப்பு சான்றிதழ் கிடைக்கும்.

மேலும், விவரங்களுக்கு onlinedegree.iitm.ac.in என்ற இணையதளத்தை பின்தொடருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

No comments