Breaking News

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை குற்றப்படுத்துவது தவறு -Villification of Govt. School Teachers and Students is detrimental to the Society at large

 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே
அதிகமாக சம்பளம் வாங்குபவர்கள்,
ஆடம்பரமாக வீடுகட்டி வாழ்பவர்கள்,
அதிக நாட்கள் விடுமுறை அனுபவிப்பவர்கள்,
ஒழுங்காக வேலை செய்யாதவர்கள்
வட்டித் தொழில், சைடு பிசினஸ் செய்பவர்கள்,
வன்முறை (பாலியல் உட்பட)யாளர்கள்
சுயநலவாதிகள்,
சமூக அக்கறை இல்லாதவர்கள்
என்ற போலியான பிம்பத்தை ,
ஆங்காங்கே விதிவிலக்காக இங்கொன்றும் அங்கொன்றுமாக
நடைபெறும் சம்பவங்களை,
ஊதிப் பெரிதாக்கி,
சமூகப் பொதுவெளிகளில்
பொதுமக்களின் மனங்களில்
உருவாக்குவதில் பெரு வெற்றி பெற்றுள்ளார்கள் வணிக உள்நோக்கம் கொண்ட வியாபாரிகளும், அரசுப் பள்ளிகளை  வெறுக்கும் ஆதிக்க மனப்பான்மை கொண்டோரும்.

அதுபோலவே
சமீப காலமாக
சில பள்ளிகளில் நடந்த சில சம்பவங்களை
மிகைப்படுத்தி
அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் அடங்காதவர்கள், தலைமுடி சீவாதவர்கள்,
சிகரெட், மது குடிப்பவர்கள்
கஞ்சா அடிப்பவர்கள்,
பெண் ஆசிரியர்களை கிண்டல் செய்பவர்கள்,
ஆசிரியர்களை மிரட்டுபவர்கள்
என்ற பிம்பம் உருவாக்கப்படுகிறதோ
என்ற ஐயப்பாடு எழுகிறது.

இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு
விளங்குவதின் அடிப்படையே அரசுப் பள்ளிகளும், ஆசிரியர்களும், மாணவர்களும்:

இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு
விளங்குவதின் அடிப்படையே கல்வி வளர்ச்சிதான் என்பது அனைவரும் அறிந்ததே .
அதற்கு அரசுப்பள்ளிகளும், ஆசிரியர்களும், மாணவர்களும் முக்கிய காரணம் என்பது நிதர்சனமான உண்மை.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எதிரான
மனநிலையை மக்களிடையே உருவாக்கிய அதே காரணிகள் தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எதிரான மனநிலையையும் பொதுமக்களிடமும் , குறிப்பாக அவர்களுக்கு பாடம் புகட்டும் உன்னத பணிபுரியும் ஆசிரியர்களிடம் விதைக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

A teacher is another Mother என்பார்கள்.
வளர்இளம் பருவத்தில் வேடிக்கைகாக மாணவர்கள் செய்யும் சிறு காரியங்களை
தகுந்த ஆலோசனை மூலம் சரிசெய்து விடலாம்.

வரம்புமீறி முரட்டுத்தனமான செயல்களில்
ஈடுபடும் மாணவர்களை உளவியல்ரீதியாக அணுகி மனநல சிகிச்சை அளித்து நல்வழிப்படுத்தி விடலாம்.  உளவியல் ஆலோசனைகளை
மாவட்ட மனநலத்திட்டம், சுகாதாரத் துறையும், பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து வழங்கலாம்  (Interdepartmental Coordination).

ஒவ்வொரு பள்ளியிலும் தன்னார்வ அடிப்படையில் பங்களிப்பை செய்ய விரும்பும் சில ஆசிரியர்களையும், வகுப்பு ஒன்று அல்லது இரண்டு எண்ணிக்கையிலான மாணவர்களை தேர்ந்தெடுத்து, உளவியல் பயிற்சி அளித்து அவர்களை Peer Counselors ஆக நியமிக்கலாம். அவர்கள் சக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உளவியல் ஆலோசனை வழங்குவார்கள். மேலும் பள்ளி மனநலத் தூதுவர்களாகவும் School Mind Health Ambassadors ) செயல்படுவார்கள்.

எல்லா அரசுப்பள்ளி மாணவர்களையும் பொதுவாக குற்றவாளிகளாகப் பார்ப்பது சமூகத்திற்கு நல்லதல்ல.
அது நாம் பெரும்பாடுபட்டு உருவாக்கிய
அரசுப்பள்ளி கல்வி கட்டமைப்பை அழித்துவிடும்.

தனியார் பள்ளிகளிலும் இதுபோன்ற பிரச்சினைகள் நடந்துகொண்டுதான் உள்ளன. ஆனால் அவை ஊதிப் பெரிதுப் படுத்தப்பட்டு பொதுவெளியை அடைவது இல்லை.
தனியார் பள்ளிகளால் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி வழங்க முடியும்.

அரசுப் பள்ளிகளால் மட்டுமே அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் கல்வி அறிவை ஊட்டமுடியும்.  மாறுபட்ட மக்களிடையே நல்லிக்கணத்தையும், சமவாய்ப்புகளை தரக்கூடிய சமத்துவ சமூகத்தையும் உருவாக்க முடியும்.

ஆசிரியர் மாணவர் நல்லுறவை வளர்ப்பதற்கான அனைத்து சூழலையும் அரசு முன்னெடுக்க வேண்டும்.

No comments