அரசு நடுநிலைப் பள்ளிக்கு பொது மக்கள் சீர்வரிசை
அரசு பள்ளி மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளுக்காக, உற்சாகமாய் உதவிய கிராம மக்கள், கல்வி சீர்வரிசை வழங்கி மகிழ்ந்தனர்.
சென்னை
வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், மோரை ஊராட்சி, புதிய கன்னியம்மன் நகரில்,
480 மாணவ -- மாணவியருடன் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. ஒவ்வொரு
ஆண்டும் இந்த பள்ளியின் மாணவர் சேர்க்கை, வரவேற்கத்தக்க வகையில் அதிகரித்து
வருகிறது.இங்குள்ள 6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள், தரையில் அமர்ந்து
படிக்கும் நிலை உள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகம் தரப்பிலும், தேவையான
அடிப்படை வசதிகள் அரசிடம் கோரப்பட்டுள்ளன.
இந்நிலையில்,
அவ்வப்போது பள்ளிக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும், புதிய
கன்னியம்மன் நகர் கிராம குடியிருப்போர் முன்னேற்ற பொதுநலச் சங்கத்தினர்,
வழக்கம் போல் இந்தாண்டும், பள்ளிக்கு உதவ முன்வந்தனர்.அந்த வகையில்,
பெற்றோர் மற்றும் கிராம மக்கள் உதவியுடன், மாணவர்கள் அமர்ந்து படிக்க
வசதியாக, 10 டெஸ்க், மின் விசிறி, டியூப் லைட், தண்ணீர் குடங்கள் என, 1
லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், சீர்வரிசையாக பள்ளிக்கு வழங்கப்பட்டன.
அவற்றுடன்
இனிப்பு மற்றும் தேங்காய், பூ, பழங்களும், குரு தட்சணையாக வழங்கப்பட்டன.
அவற்றை பொதுநலச் சங்க நிர்வாகிகள் வெங்கடேசன், இளமாறன், ரவிசந்திரன்
உள்ளிட்டோர், வில்லிவாக்கம் வட்டார கல்வி அலுவலர் மேரி ஜோசப்பின் மற்றும்
பள்ளி ஆசிரியர் குழுவினரிடம் வழங்கினர்.
முன்னதாக,
சீர்வரிசை பொருட்களை, மசூதி தெருவில் இருந்து பேருந்து நிலையம் வழியாக,
பள்ளிக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.மோரை ஊராட்சி மன்ற தலைவர் சார்பில்,
பள்ளிக்கு சீர்வரிசையாக பீரோ வழங்கப்பட்டது.இதுகுறித்து, வட்டார கல்வி
அலுவலர் மேரி ஜோசப்பின் பேசுகையில்,இந்த பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர்
உற்சாகமாக உதவுகின்றனர். இதுபோன்ற ஒத்துழைப்பு இருந்தால், இந்த பள்ளி
உயர்நிலைப் பள்ளியாக, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்து, சிறந்த அரசு
கல்வி நிலையமாக விளங்கும், என்றார்.மோரை ஊராட்சி தலைவர் திவாகர்
பேசுகையில்,இந்த பள்ளி மேலும் தரம் உயர, ஊராட்சி நிர்வாகம் ஒத்துழைக்கும்.
அந்த வகையில், பள்ளிக்கு கூடுதல் கட்டடம் மற்றும் கழிப்பறைகள் கட்ட,
ஊராட்சி வாயிலாக ஏற்பாடு செய்யப்படும். மேலும், பள்ளிக்கு அருகே மண் வெட்டி
எடுக்கப்பட்டு, பள்ளமான இடத்தில் கட்டட இடிபாடு மற்றும் மண் நிரப்பி,
சுற்றுச்சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.பொதுநலச் சங்க
நிர்வாகி இளமாறன் பேசுகையில்,பொதுவாக, பெண் குழந்தைகளுக்கும்,
சகோதரிகளுக்கும் தாய் வீட்டு சீர் வழங்குவது நமது மரபு.அந்த வகையில், இந்த
கிராமத்து பிள்ளைகளின் படிப்பிற்காக, எங்களால் இயன்ற கல்விச்சீர் வழங்கி
மகிழ்கிறோம். இந்த பள்ளி, மற்ற பள்ளிகளுக்கான, முன் மாதிரி அரசு பள்ளியாக
வேண்டும், என்றார்.
Source Dinamalar
No comments