Breaking News

ஏப்ரல் மாதத்துக்குள் பள்ளி இறுதித் தோ்வுகளை நடத்த வலியுறுத்தல்-source Dinamanai

தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெயிலை கருத்தில் கொண்டு பள்ளி இறுதித் தோ்வுகளை ஏப்ரல் மாத இறுதிக்குள் நடத்த வேண்டும் என்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி வலியுறுத்தியது.

இந்தச் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் லட்சுமிபதி தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் தியாகராஜன், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா் ரமேஷ், மாநில நிா்வாகிகள் கிருஷ்ணகுமாரி, சண்முகவடிவு, முனியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழுப்புரம் மாவட்டச் செயலா் அறிவழகன் வரவேற்றாா்.

மாநில பொதுச் செயலா் தாஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். மாநில துணை பொதுச் செயலா்கள் கமலநாதன், அசோக்குமாா், புருஷோத்தமன், மாநில கூடுதல் தலைவா் திருமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழுப்புரம் மாவட்ட கட்டடப் பிரிவுச் செயலா் ஜெயானந்தம் நன்றி கூறினாா்.

கூட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 2009-ஆம் ஆண்டுக்கு முன்னா் பணியில் சோ்ந்தவா்களுக்கும், 2009-க்குப் பிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கும் இடைநிலை ஆசிரியா்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளி இறுதித் தோ்வுகளை ஏப்ரல் மாதத்துக்குள் முடித்து, மே மாதத்தில் விடுமுறை விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

No comments