Breaking News

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் ஹெச்சிஎல் வழங்கும் ஓராண்டு பயிற்சி!

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான உத்தரவாதத்துடன் 12 மாத பயிற்சி வகுப்பை ஹெச்சிஎல் நிறுவனம் வழங்குகிறது. இந்தப் பயிற்சியை முடித்தால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தொடக்கநிலை வேலைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

கணிதம் அல்லது பிசினஸ் மேக்ஸ் ஆகிய பாடங்களை பிரதானமாகக் கொண்டு 2021ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது மறு தேர்வு எழுத இருப்பவர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு சர்வதேச அளவிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முழுநேர பணி வாய்ப்புக்கு இந்தப் பயிற்சியில் உத்தரவாதம் தரப்படுகிறது.

‘டெக்பீ’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்தப் பயிற்சியில் பங்குபெறும் மாணவர்கள், பயிற்சி முடித்த ஹெச்சிஎல் நிறுவன புராஜக்டுகளில் இன்டர்ஷிப் செய்யும்போது மாதந்தோறும் ரூ.10,000 ஸ்டைபண்ட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியை நிறைவு செய்த பிறகு, மென்பொருள் பொறியாளர், உள்கட்டுமான மேலாண்மை, டிசைன் இன்ஜினியர் அல்லது டிஜிட்டல் பிராசஸ் அசோஸியேட் போன்ற பணிகளில் மாணவர்கள் சேரும்போது, அவர்கள் சேரும் வேலை மற்றும் நிறுவனங்களைப் பொறுத்து ரூ.1.70 லட்சம் முதல் ரூ.2.20 லட்சம் வரையில் ஆண்டு ஊதியமாக கிடைக்கும்.

தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், ஆன்லைனில் நடத்தப்படும் திறன் தேர்வில் பங்கேற்க வேண்டியிருக்கும். இந்த ஹெச்சிஎல் கேட் தேர்வில் தேர்ச்சியடைபவர்களுக்கு பின்னர் இன்டர்வியூ நடத்தப்பட்டு, அதற்குப் பிறகு ஆஃபர் லெட்டர் வழங்கப்படும். ஹெச்சிஎல் கேட் தேர்வு என்பது மாணவர்களின் கணித அறிவு, ஆங்கில மொழித் திறன் மற்றும் சிந்தனைத் திறன் போன்றவற்றை பரிசோதனை செய்யும் தேர்வாகும்.

இதுகுறித்து ஹெச்சிஎல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹெச்சிஎல் நிறுவனத்தில் தொடக்க நிலையில் உள்ள தகவல் தொழில்நுட்ப பணியிடங்களுக்கு மாணவர்களை தொழில்நுட்ப ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் தயார் செய்யும் வகையில் இந்தப் பயிற்சி அமையும்.

ஹெச்சிஎல் நிறுவனத்தில் பயிற்சி பெறும்போதே, பிஐடிஎஸ் பிலானி, சாஸ்த்ரா, அமிதி போன்ற தரம்வாய்ந்த பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பட்டப்படிப்பையும் படிக்கலாம். மாணவர்கள் தேர்வு செய்யும் பட்டக் கல்வியை பொறுத்து, அவர்களுக்கான கல்வி கட்டணத்தின் ஒரு பகுதியை ஹெச்சிஎல் நிறுவனம் செலுத்தும்.

ஹெச்சிஎல் பயிற்சிக் கல்வியில் சேருவதற்கு ரூ.1,00,000 மற்றும் வரிகள் சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டும். மாணவர்கள் ஹெச்சிஎல் நிறுவனத்தின் https://www.hcltechbee.com/ என்ற இணையதளத்தில் பயிற்சி திட்டத்தில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு நேர பணி கிடைக்கும்

பயிற்சி முடித்த மாணவர்களுக்கு ஹெச்சிஎல் நிறுவனத்திலேயே முழு நேரப் பணியாளர்களாக வேலை கிடைக்கும். அவர்களுக்கு உயர் கல்வி பயிலுவதற்கான வாய்ப்புகள், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தப் பயிற்சி திட்டம் கடந்த 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில், இதுவரை 5,000 மாணவர்கள் பயிற்சி பெற்று தற்போது ஹெச்சிஎல் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

No comments