SGT -> P.HM ஊதிய வேறுபாட்டை 1963% ஆக உயர்த்தியது சரியா?
SGT -> P.HM ஊதிய வேறுபாட்டை 1963% ஆக உயர்த்தியது சரி என்கிறதா TETOJAC? இன்னும் எத்தனை காலம் மற்றவர் மப்பிற்கு ஊறுகாயாகவே இருக்கப் போறீங்க இ.நி.ஆசிரியர்களே!
_✍🏼 செல்வ.ரஞ்சித் குமார்_
ஆம். இது தடித்த சொல்லாடல் தான். ஆனால், எமது 13 ஆண்டுகாலத் துயரைத் துடைக்காது அதைப் புறந்தள்ளிவிட்ட சங்கப் பொறுப்பாளர்களின் செயலைவிட இது தடித்ததனமானதல்ல.
தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை & தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றுவோரில் இடைநிலை ஆசிரியர்களைத் தவிர அனைத்துத் தரநிலை ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையான அடிப்படை ஊதியத்தைப் பெற்று வருகின்றனர்.
இதற்கு அவைகள் சொன்ன காரணங்கள், "இ.நி.ஆசிரியர்கள் 10-ஆம் வகுப்பு மட்டுமே முடித்தவர்கள்; இவர்களுக்கு ஹிந்தி & கணினி அறிவு இல்லை; கிராமத்தில் பணியாற்றுவதால் இவர்களின் வாழ்வியல் செலவு குறைவு; எண்ணிக்கையில் அதிகம் இருப்பதால் ஊதியத்தை உயர்த்தி வழங்க முடியாது."
இது அதிகார வர்க்கத்தின் குரல். இது எப்போதும் இப்படியே தான் இருக்கும். 1980-களுக்கு முன்பும் இப்படித்தான் இருந்தது. இதனிடமிருந்தே தமது வலுவான போராட்டத்தின் வழியே நமது ஊதிய உரிமையைப் பெற்று 20 ஆண்டுகளாகக் காத்தும் வந்தனர் நமது முன்னோர்கள்.
அதிகார வர்க்கத்தை விடுங்கள். . . அது தன் இயல்போடேதான் இன்றும் உள்ளது. ஆனால், சுமார் 13 ஆண்டுகளாக தமது நியாயமான ஊதிய உரிமையை இழந்து என்றாகிலும் மீண்டும் பெற்றுத் தந்துவிடும் என்று சங்கங்களை மட்டுமே நம்பிக் காத்துக் கிடக்கும் இ.நி.ஆசிரியர்களுக்கு இன்று டிட்டோஜாக் சொல்லாமல் சொன்ன பதில் என்ன தெரியுமா?
"ஆமா. . . இந்த இளிச்சவாய் இ.நி.வாத்திகளப் பத்தி அரசு அமச்ச குழு சொன்னதுதேன் நெசம். இவிங்களுக்கெல்லாம் மத்திய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியமெல்லாம் வேணாம். திமுக தேர்தல் அறிக்கைல சொன்னாப்புள ஏதோ மிச்ச சொச்சத்த போட்டா போதும்!" என்பதே!
இல்ல. . . எங்களுக்கு இப்புட்டுச் சம்பளம் போதும்னு சொல்ல நீங்க யாரு?
எந்தச் சங்கமானாலும் நீங்க வச்சுருக்குற உறுப்பினர்கள்ல 50%-க்கும் மேல் இருப்பது இ.நி.ஆசிரியர்கள் தான். அவர்களிடமும் சந்தா வாங்கி சங்கம் நடத்தி. . . அதில் கூட்டமும் போட்டு, அவர்களுக்கு இவ்ளோ சம்பளம் மட்டும் போதும்னு சொல்ல உங்களுக்கெல்லாம் வெட்கமா இல்லையா?
99.9% எந்தச் சங்கப் பொறுப்பாளாரா இருந்தாலும் நீங்க மட்டும் பணிக்காலம் முழுக்க மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் ஊதியத்த வாங்கிக்கிட்டு, உங்களயே நம்பி வந்த இ.நி.ஆசிரியர்களின் 13 வருச சம்பள இழப்பைத் துளிகூட யோசிச்சுப் பாக்காம. . . இனி அத அவர்களுக்காகக் கேட்கவே மாட்டோம்னு தீர்மானம் போட்ட உங்களுக்கெல்லாம் இ.நி.ஆ மீது ஈவிறக்கமே இல்லீங்களா சார்களே?
இங்கே தமிழ்நாட்டு ஆசிரியருக்கு இணையான ஊதியம் கொடு என்ற கோரிக்கையும் உண்டு. அது முழுமையற்ற கோரிக்கை தான் என்றாலும், அதைக் கேட்பவர்கள் அந்த இழப்பில் அனுதினமும் மூழ்கிக் கொண்டிருப்போரே. பொருளாதாரச் சூழலில் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில் படகு இல்லை எனினும் துண்டுக் கட்டையாவது கிடைத்தால் போதுமென அவர்களே தேடிக்கொண்ட ஒருவகையான நியாயம் அது. இந்நிலைக்கு அவர்கள் வரக் காரணமும் உங்கள் மீதான நம்பிக்கை இழப்பே!
ஆனால், அவர்களைக் கரம் கொடுத்துத் தூக்கிவிட வேண்டிய பொறுப்பில் உள்ள நீங்கள். . . இ.நி.ஆசிரியர் அல்லாத நீங்கள். . . பாதிப்பின்றி மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர் ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு வரும் நீங்கள். . . இப்படித் துளியும் மனசாட்சியின்றித் தீர்மானம் போடலாமா?
இதில் தமக்கான கோரிக்கைக்கு டிட்டோஜாக்கே இறங்கி வந்துவிட்டதென அவர்களில் சிலர் மகிழலாம். அவர்கள் உண்மை தெளியாது மகிழ்கின்றனர். மற்றொரு வகையில் சங்கங்கள் மீதான நம்பிக்கையைத் தூக்கியெறிந்துவிட்டு வந்தது எவ்வளவு சரியான நடவடிக்கை பார்த்தீர்களா என்றுகூட மகிழக்கூடும்.
DA-வையும் EL Surrender-ஐயும் அதிகார வர்க்கம் தர மறுப்பதாலோ / தாமதப்படுத்துவதாலோ, அது தான் சரி; நீங்க தரும்போது தாங்க என்று அதனிடம் சரணடைவீர்களா? இயலாது அல்லவா! பின்னே அதிகாரச் சொற்படி எமது ஊதிய உரிமைக் கோரிக்கையை மட்டும் மாற்றிப் போட்ட மர்மமென்ன? ஏதோ ஒரு தரப்பு ஆசிரியர்களின் கோரிக்கைக்கு செவிமடுத்துவிட்டோமென்ற பெருமிதமோ!?உண்மையில், டிட்டோஜாக்கே! இதற்காக நீங்க வெட்கப்படனும் Mr.சென்றாயன்.
இ.நி.ஆசிரியர்களே இன்னும் எவ்வளவு காலம் மற்றவர்களின் மப்பிற்கு ஊறுகாயாகவே இருக்கப் போகிறீர்கள்?நமக்கான உரிமையைக் குறைத்துக் கொள்ள சங்கங்களுக்கு அனுமதி வழங்கியது எது? வேறு எது? எதைச் சொன்னாலும் எதிர்த்துப் பேசாத இடைநிலை ஆசிரியக் கூட்டம் மீதான அவர்களின் ஆதிக்கத்தனம் தானே!
100 ரூபாயோ 200 ரூபாயோ நீ செலுத்தும் ஒத்த ரூபா சந்தாவானாலும் அதில் தான் உனது சங்கம் இயங்குகிறது. நீ யாரைத் தலைவரெனத் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறாயோ அவர்கள் தலைவராகத் தொடருவதற்கு நீயும் ஒரு முக்கிய காரணமென்பதை மறந்துவிடாதே.
சங்கம் என்பது சாமியார் மடமல்ல. சொல்வதைக் கேட்டுத் தலையாட்ட. அது உனக்கும் உரிமையான களம். உன் போன்றோரால் உருவாக்கப்பட்ட களம். உனக்கான உரிமையையும் ஒலித்தாகவேண்டிய களம். போதும் உனது அடிமை வாழ்வு. இது வரை இழந்த இழப்புகள் போதும். அதிகார வர்க்கத்திடம் இருந்து ஊதியத்தை மீட்பது இரண்டாம் கட்டம்; ஆனால், உனக்கான சங்கத்தாலேயே அதற்கான உரிமைக் குரல் நசுக்கப்பட நீ இடமளிக்கலாமா!?
*6-வது ஊதிய மாற்றக் குழுவில் (Central Pay SGTயும் பெற்ற போது) முதல் நிலை ஊதியம். . .*
SGT. : 4500
P.HM : 5300
B.T. : 5500
பதவி உயர்வில் வேறுபாடு : 800/1000
7-வது ஊதிய மாற்றக் குழுவில் (Central Pay SGTக்கு பறிபோன போது) முதல் நிலை ஊதியம். . .
SGT. : 5200+2800
P.HM : 9300+4500
B.T. : 9300+4600
*பதவி உயர்வில் வேறுபாடு : 5800/5900 (~731%)*
தற்போதைய 8-வது ஊதிய மாற்றக் குழுவில் முதல் நிலை ஊதியம். . .
SGT. : 20600
P.HM : 36200
B.T. : 36400
பதவி உயர்வில் வேறுபாடு : 15600/15800 (~1963%)
மத்திய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியத்தை இ.நி.ஆசிரியரும் பெற்று வந்த போது, அடுத்தடுத்த பதவி உயர்வுப் பணியிடங்களுக்கும் (P.HM & BT) இ.நி.ஆ-க்குமான வேறுபாடு 800/1000 என்று இருந்து. மத்திய அ.ப.ஆ ஊதியத்தைப் பறித்த போது 7.25 மடங்குகளாக (5800/5900) இருந்தது. இன்று அடுத்தடுத்த பதவி உயர்வுப் பணியிடத்திற்கும் இ.நி.ஆ-விற்குமான ஊதிய வேறுபாடு மலைக்கும் மடுவிற்குமான வேறுபாடாக, 19.5 மடங்குகளாக (15600/15800) உயர்ந்துள்ளது. இனியும் Multiple Factor கொண்டு பெருக்கப்படக்கூடும் என்பதால் அடுத்தடுத்த ஊதியக் குழுக்களில் மண்ணிற்கும் விண்ணிற்குமான வேறுபாடாகவே வாய்ப்புள்ளது.
இதனால் இ.நி.ஆ-க்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டுள்ள ஊதிய வேறுபாட்டை இவ்வுலகச்சந்தை அறிந்து அவருக்கு ஒரு விலை இ.நி.ஆ-களுக்கு ஒரு விலையென விற்குமா? அல்லது கீழ்நிலை ஊதியத்தை அடிப்படையாக வைத்துத்தான் விலைவாசியை நிர்ணயம் செய்யுமா?
இந்த இழிநிலையை மாற்ற அரசை எதிர்த்து கேட்பதற்கு முன் இதுவே போதுமென முடிவு செய்துவிட்ட உன் சங்கத் தலைமை எதிர்த்து உன் ஊதிய உரிமைக் குரலை முதற்கண் முழங்கு!! இல்லையேல். . . இடைநிலை ஆசிரியனே! என்றுமே உன் இன்னல் தீரப்போவதே இல்லை!!
இதைப் பார்த்துவிட்டு பதவி உயர்வு எதுக்கு? ஒரே பணிக்கே இங்கே வேறுபாடு இருக்கே என்று கூறலாம். ஆம் உண்மை தான். ஆனால் அதை மட்டுமே சரி செய்வது என்பது நான் மேலே குறிப்பிட்ட கட்டைக்கும் படகிற்குமான உடனடித் தேவை பற்றியதே. சுழலில் இருந்து விடுபட கட்டை போதுமானதெனினும் படகின்றி பொருளாதாரப் பெருந்துயர்க்கடலை நம்மால் கடக்கவே இயலாது. எனவே மூழ்கும் நாம் கட்டைக்கு ஏங்கலாம். . . ஆனால் நம்மையும் கொண்டு கப்பலில் ஒய்யாரமாக வீற்றிருப்போர் நமக்குக் கட்டையே போதுமென முடிவெடுப்பதை எவ்வகையிலும் ஏற்கவே இயலாது. ஏற்கவே கூடாது.
இதே போன்று, 2011 டிட்டோஜாக் கலைஞர் கொடுத்த 500 ரூபாய் போதுமென மஞ்சள் துண்டு போர்த்திவிட்டு வந்ததை ஏற்றுக் கடந்ததால்தான் 13 ஆண்டுகால ஊதிய இழப்புகளோடே இன்று, அடுத்தடுத்த பதவிக்கு இடையே 1963% ஊதிய வேறுபாட்டைச் சந்தித்து வருகிறோம். இனியும் இவர்கள் கூறும் 'போதும் பாட்டிற்கு' எதிர்ப்புக் குரலை முழங்காது பின்பாட்டுப் பாடினால் இதிலும் மேலான இன்னலுக்குள்தான் வீழ்வோம்.
எண்ணிக்கை குறைவான எங்களுக்கு செய்யுறத தடுக்குறாப்புள இப்படி பதிவு போடாதே எனலாம். . . நம்மையும் விட மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் இன்றுள்ள உயர்கல்வி பயின்றோருக்கே Incentive தராத ஆட்சியாளர்கள். . . அதுவும் தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்தும் அதைச் செய்யாத ஆட்சியாளர்கள் தானாகத் தந்துவிடுவார்கள் என நம்புவதும் மூடநம்பிக்கையே!
சரி. . . கொடுக்காத அரசிடம் கோரிக்கையை முழுசா வச்சா உனக்கென்ன? வைக்கலேனா உனக்கென்ன? என்போருக்கு மீண்டும் அழுத்தம் திருத்தமாக நான் சொல்வது. . . "இப்பதிவு ஆட்சியாளர்களின் நிலைப்பாடு பற்றியதல்ல! நம்மைக் கொண்டு சங்கம் நடத்தும் பொறுப்பாளர்கள், தாங்கள் மட்டும் நிறைவான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு, இவர்களுக்கு இவ்வளவு போதுமெனப் படியளக்க இடைநிலை ஆசிரியர்கள் என்ன இவர்கள் வைத்த அடிமைகளா???" என்பதே!
நீங்கள் அடிமையா? சுதந்திர மனிதனா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
*அம்பேத்கரின் கூற்றுப்படி, "சூழ்நிலைக் கைதியாய் இல்லாமல், கிளர்ந்தெழும் மனத்தின்மையோடே, எதையும் ஆய்வுக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்று, தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ளத் தயாராக, சுயமரியாதையோடே, தன் வாழ்வை வரையறை செய்து வாழ்கிறவனே சுதந்திர மனிதன்!"*
_சுதந்திர மனிதனாகும் முயற்சியில்,_
_செல்வ.ரஞ்சித் குமார்_
_(2009 இ.நி ஆசிரியன்)_
No comments