Breaking News

மாணவிகள் 14417 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்: இணை கமி‌ஷனர் தகவல்..!


சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு, ஆணையத்தின் சார்பில் சரண்யா ஜெயக்குமார் தலைமை வகித்தார். வடசென்னை போலீஸ் இணை கமி‌ஷனர் ரம்யா பாரதி கலந்து கொண்டு மாணவிகளிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: “பள்ளி பருவத்தில் இருந்தே மாணவ - மாணவிகள் சமூக விழிப்புணர்வை கற்றுக்கொள்ள வேண்டும்.

பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்கள் உள்ளிட்ட தீய சக்திகளிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும்.

தங்களுக்கு ஏற்படும் பாலியல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மாணவ - மாணவிகள் பெற்றோரிடம் தைரியமாக கூற வேண்டும். ஆசிரியர்களிடமும் தெரிவிக்க வேண்டும்.

இதற்கு அடுத்தபடியாக, காவல் துறையிலும் உரிய புகார் அளிக்க வேண்டும். அத்துடன், 14417 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணில் எப்போது வேண்டுமானாலும் மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து புகார் அளிக்கலாம்.இது போன்று தகவல் தருபவர்களின் விவரங்கள் முழுமையாக பாதுகாக்கப்படும். மாணவ - மாணவிகளுக்கு இது போன்ற விழிப்புணர்வுகள் தொடர்ந்து ஏற்படுத்தப்படும்” என்று ரம்யா பாரதி பேசினார்.14417 என்ற இந்த எண்ணுக்கு மாநிலத்தின் எந்த பகுதியில் இருந்தும் மாணவ - மாணவியர் தங்கள் பள்ளிக்கூடங்களில் நிலவும் மற்ற பிரச்னைகள், குடிநீர் தட்டுப்பாடு, விளையாட்டு திடல் இல்லாதது போன்ற குறைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.

அத்துடன், தேர்வுகள் தொடர்பான தகவல்களும் கேட்டுப்பெறலாம். பாலியல் புகார்கள் குறித்து மாணவிகள் தெரிவிக்கும் புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று, போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments