பேருந்தில் அடாவடி.. கண்டித்ததால் கண்ணாடியை உடைத்த பள்ளி மாணவர்கள் !!
அரசு பேருந்தில் பயணத்தின்போது சேட்டை செய்த மாணவர்களை நடத்துனர் கண்டித்ததால், மாணவர்கள் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கிச் சென்ற அரசு பேருந்து சென்றுள்ளது. பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகள் அதிகம்பேர் பயணித்துள்ளனர். இதனால் செல்லசெல்ல பேருந்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் தகாத வார்த்தையால் பேசியபடியே வந்துள்ளனர்.
இதனை பார்த்த பேருந்து நடத்துனர் முருகன் மாணவர்களை கண்டித்துள்ளார். இதன் பின்னர் எம்ஜிஆர் நகர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்பகுதி கண்ணாடியை மாணவர்கள் கல்லால் தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர். இதில், பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது.
இதனால் பேருந்து நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அரசு பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். மேலும் கண்ணாடி உடைப்பில் ஈடுபட்ட மாணவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments