Breaking News

எங்க திட்டத்தை இப்படிதான் செயல்படுத்தினோம்!'- மத்திய அரசின் நீர் மேலாண்மை விருது பெற்ற அரசுப் பள்ளி:

 தலைமை ஆசிரியர் வளர்மதி

மத்திய அரசின் `ஜல் சக்தி துறை' அமைச்சகத்தின் உத்தரவின்படி 2020-ம் ஆண்டு நாடு முழுவதும் நீர் மேலாண்மையில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களை, துறையின் சிறப்புக் குழு, மாநிலம் வாரியாக நேரில் கள ஆய்வு செய்தது. சிறப்பாகச் செயல்பட்ட மாநிலம், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கி கௌரவித்தார்.

 அந்த வகையில், தேசிய அளவில் நீர் மேலாண்மையில் சிறந்த பள்ளி என்ற விருதை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றுள்ளது. பள்ளியின் சார்பாக, அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் அதன் தலைமை ஆசிரியர் தா.வளர்மதி நேரில் சென்று விருதைப் பெற்று வந்திருக்கிறார்.

 2018-ம் ஆண்டு காவேரிப்பட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற பிறகு நீர் மேலாண்மைத் திட்டத்தைத் தயார் செய்து 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இதை செயல்படுத்தி வருகிறார் வளர்மதி. நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் அந்தப் பள்ளிக்கு விசிட் அடித்தோம். மாணவர்கள் வகுப்பிலும், மர நிழலிலும் அமர்ந்தபடி படிப்பில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தனர். தலைமை ஆசிரியர், திட்டம் எப்படிச் செயல்படுகிறது என்று விளக்கத் தொடங்கினார்.

முதலாவதாக கட்டடங்களில் இருந்து வெளியேறக்கூடிய மழைநீரை ஒரு பொதுவான குழாயின் மூலம் வளாகத்தில் உள்ள ஒரு பெரிய கீழ்மட்டத் தொட்டியில் சேகரித்து நிலத்தடி நீராக்குகிறோம். இது மட்டுமல்லாமல், கட்டடங்களுக்கு பின்புறம் சுமார் 15 இடங்களில் சிறு சிறு கீழ்மட்டத்தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக எங்கள் பள்ளியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டமானது உயர்ந்துள்ளது. நீரைச் சிக்கனமான முறையில் பயன்படுத்தி வருவதால் தட்டுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. உதாரணமாக, வளாகத்தில் 1,000 சதுர அடியில் அமைந்துள்ள மூலிகைத் தோட்டத்தில் வளர்க்கப்படும் 150 வகையான மூலிகைச் செடிகளுக்கும் சொட்டுநீர் பாசனத்தின் மூலமாக நீர் பாய்ச்சப்படுவதால் நீர் விரயமாவதில்லை.

தலைமை ஆசிரியர் அறையின் முன் அமைக்கப்பட்டுள்ள பூந்தோட்டத்துக்கு தெளிப்புநீர் பாசனம் இணைக்கப்பட்டுள்ளது. இதுவும் நீர் விரயமாவதைத் தடுக்கிறது. மேலும், மைதானத்தை சுற்றியுள்ள மரங்களுக்கும், செடிகளும் OLLA என்ற பாரம்பர்ய நீர் பாசன முறைப்படி நீரூற்றப்படுகிறது. அதாவது இரண்டு மரங்களுக்கு இடையில் இரண்டடி ஆழக் குழி தோண்டி அதில் ஒரு பானை வைத்து, அதில் நீர் ஊற்றி மூடப்படும். பானையில் இயற்கையாகவே உள்ள நுண்துளைகள் மூலம் நீர் கசிந்து வெளியேறும்.

இதனால் மரத்தைச் சுற்றி எப்போதும் ஈரப்பதம் காணப்படும். பானையில் உள்ள நீர் முழுவதுமாக வெளியேற 5 முதல் 7 நாள்கள் ஆகும். நீர் வெளியேறிய பிறகு மீண்டும் அதை நீர் ஊற்றி நிரப்பிவிடுவோம். இதன் மூலம் பெரும்பாலான நீர் சேமிக்கப்படுகிறது. மாணவர்கள் குடிப்பதற்காக பயன்படுத்தும் ஆர்.ஓ நிறுவப்பட்டுள்ளது. அதில் சுத்தகரிக்கப்பட்டு வீணாகிற நீரை கழிவறைகளுக்குப் பயன்படுத்துகிறோம்.

4,000 லிட்டர் ஆர்.ஓவுக்கு அனுப்பினால் 1,000 லிட்டர் மட்டும் தான் குடிநீராக மாறும். மீதமுள்ள 3,000 லிட்டர் தண்ணீரை இதுபோன்ற முறையில் பயன்படுத்தி வருகிறோம். கழிப்பறைகளிலும் , கைகழுவுமிடங்களிலும் `பிரஸ்' பட்டன் குழாய் பொருத்தப்பட்டுள்ளதால் தேவையின்றி நீர் வீணாவதில்லை.

இந்த மாதிரியான நீர் மேலாண்மை முறைகளை பள்ளியில் மட்டுமல்ல, மாணவர்களின் வீடுகளிலும் பயன்படுத்தக்கூறி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். முன்னதாக எங்கள் பள்ளியில் ஓராண்டுக்கு 1,34,4000 லிட்டர் நீர் பயன்பாட்டில் இருந்தது. இந்த மேலாண்மை முறைகளின் மூலமாக நீர் பயன்பாட்டை 86,4000 லிட்டராகக் குறைத்துள்ளோம்

ஒவ்வோர் ஆசிரியரின் தலைமையில் மாணவர் குழுக்கள் அமைக்கப்பட்டு இவை அனைத்தும் கண்காணிக்கப்படுவதால் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. நீரை வீணாக்கக்கூடாது என்கிற கருத்து பள்ளியிலிருந்தே உருவாக வேண்டும் என்றுதான் இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தினோம்" என்று உளம் மகிழ்ந்து பேசி விடை கொடுத்தார் தலைமை ஆசிரியர் வளர்மதி.

Source: Vikadan.com

 


No comments