யாரும் திருட முடியாத ஒரே சொத்து கல்வி - முதல்வர் :
''யாரும் திருட முடியாத ஒரே சொத்து கல்வி; அதை நன்றாக படிக்க வேண்டும்,'' என, மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறினார்.அரசு பள்ளிகளின் மேலாண்மை குழு உறுப்பினர் தேர்வுக்கான துவக்க நிகழ்ச்சி, சென்னை லேடி வெலிங்டன் மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:பள்ளிப் பருவம் திரும்ப கிடைக்காத மகிழ்ச்சியான காலம். இந்த பருவத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி, வேறு எந்த பருவத்திலும் கிடைக்காது. எனவே, பள்ளி பருவ காலத்தை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். கல்வியை மட்டும் உங்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது.
திருட முடியாத சொத்து ஒன்று இருந்தால், அது கல்வி மட்டுமே. அதனால் தான் கல்விக்கு, அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர் ஆகிய மூவரின் சிந்தனையும், ஒரே நேர்கோட்டில் இருந்தால் தான், கல்வி நீரோடை மிக சீராக செல்லும். அதில், ஒருவர் தடங்கல் போட்டாலும், கல்வி தடம் புரண்டு விடும்.எனவே, அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக, பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது.
அரசு பள்ளியின் தேவைகள் அறிந்து, அதை வழங்க வேண்டும். அதை செயல்படுத்தவே, பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.பின், பள்ளி மேலாண்மை குழு தொடர்பான பிரசார வாகனங்களையும், முதல்வர்கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் வரவேற்று பேசினார். கமிஷனர் நந்தகுமார் நன்றி கூறினார்.
அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, சேப்பாக்கம் எம்.எல்.ஏ., உதயநிதி, சென்னை மேயர் பிரியா ராஜன், பள்ளிக் கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா பங்கேற்றனர்.மாநிலம் முழுதும், 37 ஆயிரம் பள்ளிகளில், மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
No comments