ஏடிஎம்ல பணம் வரலனா என்ன பண்றது? உடனே நீங்க செய்ய வேண்டியது..!
ஏடிஎம் மெஷினில் நாம் பணம் எடுக்கும்போதும் இந்தப் பிரச்சினை அடிக்கடி நடக்கும். அதாவது ஏடிஎம் கார்டைச் செலுத்தி பணத்தை எடுக்கும்போது கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டுவிடும்.
ஆனால் மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. நிறையப் பேர் இந்த விஷயத்தில் அச்சம் கொள்வார்கள். ஏனெனில் பணம் திரும்ப கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அச்சத்தில் இருப்பார்கள்.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, வங்கிக் கணக்கில் பணம் டெபிட் செய்யப்பட்ட போதிலும் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கத் தவறினால் வங்கிகள் அதிகபட்சமாக ஐந்து நாட்களுக்குள் கழிக்கப்பட்ட தொகையை தானாகவே திருப்பிச் செலுத்த வேண்டும். இதுவே விதிமுறை.
ஒருவேளை தோல்வியுற்ற பரிவர்த்தனைக்கு 5 நாட்களுக்குள் டெபிட் செய்யப்பட்ட பணத்தை தானாக மாற்ற வங்கிகள் தவறிவிட்டால் ஒரு நாளைக்கு ரூ. 100 என்ற அளவில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். 5 நாட்களில் இருந்து கணக்கில் பணம் மீண்டும் வரவு வைக்கப்படும் வரை இந்தத் தொகை கணக்கிட்டு கொடுக்கப்பட வேண்டும்.
முதலில் செய்ய வேண்டியது
முதலில் நீங்கள் ஏடிஎம் இயந்திரத்தின் எண்ணை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஏடிஎம் பரிவர்த்தனை ரசீதை எடுத்து வைக்க வேண்டும். சில நேரங்களில் சில ஏடிஎம்களில் ரசீது வராது. அப்போது உங்கள் மொபைல் நம்பருக்கு வந்த பரிவர்த்தனை தொடர்பான குறுஞ்செய்தியைக் காட்ட வேண்டும்.
அடுத்து நீங்கள் சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ள வேண்டும். வங்கிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் உங்களுடைய பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுப்பார்கள்.
ஏடிஎம்மில் பணம் வரவில்லை என்பதை வங்கிகள் பெரும்பாலும் ஏற்காது. நீங்கள் ஆதாரங்கலை வழங்கிய பிறகு குறிப்பிட்ட காலத்திற்குள் வங்கி டெபிட் செய்யப்பட்ட தொகையைத் திருப்பித் தரவில்லை என்றால் முதலில் நீங்கள் வங்கியின் உள் ஒம்புட்ஸ்மேன் அதிகாரியை அணுக வேண்டும். ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு பிரத்யேக அதிகாரி மற்றும் உள் ஒம்புட்ஸ்மேன் அலுவலகம் உள்ளது. வங்கிக்கு எதிராக புகார் செய்ய அந்த வங்கியின் கீழ் உள்ள குறைதீர்ப்பாளரின் நோடல் அதிகாரியை நீங்கள் அணுகலாம்.
வங்கியின் உள் ஒம்புட்ஸ்மேனில் நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால் அடுத்து நீங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஒம்புட்ஸ்மேன் அமைப்பை அணுகலாம். ரிசர்வ் வங்கியின் ஒம்புட்ஸ்மேன் அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள பிரத்யேக ஆன்லைன் இணையதளமும் உள்ளது. அதன் மூலம் நீங்கள் புகார் செய்யலாம். இதன் பின்னர் உங்களுடைய பணம் உடனடியாக திரும்பக் கிடைக்கும்.
No comments