ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் வரலாறு..!
ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று, முட்டாள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் வரலாற்றை சற்று திருப்பிப் பார்ப்போம்.
ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று முதல், அடுத்த ஆண்டின் மார்ச் 31-ம் தேதிவரை நிதியாண்டாக பின்பற்றப்படுகிறது. இதன்படி, நிறுவனங்கள் புதுக் கணக்கை இன்று தொடங்கும். அதேநேரம், ஏப்ரல் ஒன்றாம் தேதி முட்டாள் தினமாக கருதப்படுகிறது. கேலிக் கூத்து, கிண்டல் ஆகியவற்றின் மூலம், ஒருவரை மற்றொருவர் ஏமாற்றும் செயலில் ஈடுபடுவார்கள்.இதற்கு பல்வேறு வரலாறுகள் உள்ளன.
1582-ல் கிரிகோரியன் காலண்டரை போப் 13-ம் கிரிகோரி அறிமுகப்படுத்தினார். இதன்படி, ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு தொடங்கும். அதற்கு முன்புவரை பின்பற்றப்பட்ட ஜூலியன் காலண்டரின்படி, மார்ச் மாத இறுதியில் புத்தாண்டு கொண்டாடப்படும். கிரிகோரியன் நாட்காட்டி அமல்படுத்தப்பட்டபிறகு, ஏப்ரல் ஒன்றாம் தேதியை முட்டாள் தினமாக மக்கள் கொண்டாடத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த நாட்காட்டி மாற்றத்தை ஏற்றுக் கொள்ள பல்வேறு நாடுகளும் மறுத்துவந்த நிலையில், முதலாவது நாடாக 1582-ம் ஆண்டில் பிரான்ஸ் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, புதிய காலண்டரை ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களை முட்டாள்களாக கருதினர். முட்டாள் தினத்தை கொண்டாடும் வகையில், ஒருவரின் முதுகுப் பகுதியில் காகிதத்தால் தயாரிக்கப்பட்ட மீன்களை ஒட்டிவைப்பார்கள். இதனை ஏப்ரல் மீன் என்று கூறுவார்கள். பிரான்சிலும் இதே முறையில் தான் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டுள்ளது.
பழங்கால ரோமிலும் ஏப்ரல் மாதத்தில் முட்டாள்கள் தினம் குறித்த வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. அன்றைய நாளில் பொதுமக்கள் மாறுவேடமிட்ட, சகமனிதர்களை கேலி செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். ஸ்காட்லாந்தில் இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் இந்த முட்டாள்கள் தினத்தின் போது, காகித வால் அல்லது என்னை உதை என்ற வாசகம் அடங்கிய காகிதம் நண்பர்களின் முதுகில் ஒட்டப்படும் என கூறப்படுகிறது.
No comments