Breaking News

வருமான வரி விதிகள் மாற்றம்: மாதாந்திர பென்ஷனுக்கு மூன்று விதமான வரி விலக்கு!

வருமான வரியை குறைப்பதற்கு பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீடு வாய்ப்புகள் உள்ளன. வருமான வரிச் சட்டத்தின் கீழ், ஒரு சில செலவுகளும் வருமான வரியின் தொகையை குறைக்க உதவும். வருமான வரி சட்டம் மற்றும் பிரிவுகளில் அவ்வபோது மாற்றங்கள் அமல்படுத்தப்படும். சம்பளத்தில் ஓய்வூதியத்துக்கு பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு கூடுதலாக வரி விலக்கு நன்மைகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டு 2022-23 முதல் இது அமலுக்கு வருகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார்.

மாநில அரசு ஊழியர்கள், இந்த நிதியாண்டு அதாவது 2022-23 முதல் தங்கள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தேசிய ஓய்வூதிய அமைப்பில் (என்பிஎஸ்) 14 சதவீத வரிச் சலுகையைப் பெற முடியும். வருமான வரிச் சட்டத்தில் உள்ள தற்போதைய விதிகளின்படி, 80CCD (NPS கணக்கு) பிரிவின் கீழ், ஒரு நபரின் குறிப்பிட்ட ஓய்வூதிய கணக்கிற்கு, மத்திய அரசு அல்லது சம்பளம் வழங்கும் நிறுவனத்தின் பங்களிப்பு, அந்த நபரின் மொத்தக் கணக்கீட்டில் கழிப்பதற்கு அனுமதிக்கப்படும்.

இதற்கு முன்பு, இந்த வரம்பு ஒரு நபரின் சம்பளத்தின் 10 சதவிகித வருமானம் என்ற அளவில் இருந்தது. மாநில அரசுகள், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலேயே, அந்தந்த உள்மட்ட ஒப்புதல்கள் மற்றும் அறிவிப்புகளின் மூலம், தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பென்ஷன் பங்களிப்பை 14 சதவீதமாக உயர்த்துவதற்கான மாற்றத்தை 01.04.2019 அன்று வழங்கியது என்று பட்ஜெட் குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த 14 சதவிகித பென்ஷன் வரி விலக்கு நன்மை இனி மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, NPS பங்களிப்பு விலக்கு அதிகபட்சமாக 10 சதவிகிதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் எப்படி கூடுதல் நன்மைகளைப் பெறலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.

வருமான வரிச் சட்டம் 1961 இன் கீழ், NPS கணக்குக்கு உங்களின் பங்களிப்பு மற்றும் உங்கள் நிறுவனத்தின் பங்களிப்பு ஆகிய தொகைகள் மீது நீங்கள் வரிச்சலுகை பெறலாம். அதே போல, வருமான வரிச்சட்டம், 80CCD பிரிவின் கீழ், NPS கணக்குக்கு நீங்கள் பங்களிக்கும் தொகையில் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு பெறலாம்.

கூடுதலாக, வருமான வரிச்சத்தம் பிரிவு 80CCD (1b) இன் கீழ், NPS கணக்குக்கு பங்களிப்பதற்காக ஊழியர்கள் ரூ. 50,000 வரை கூடுதல் விலக்கு பெறலாம். ஆனால், இது டயர் 1 NPS கணக்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். டயர் 2 NPS நிதிகளில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த வரிச் சலுகை எதுவும் கிடைக்காது.

வருமான வரிச் சட்டம் பிரிவு 80CCD (2) இன் கீழ் NPS கணக்குக்கான உங்கள் நிறுவனத்தின் பங்களிப்புக்கும் நீங்கள் வரி விலக்கு பெறலாம்.

ஒரு நிதியாண்டில் உங்களுடைய NPS கணக்கு, EPF உள்ளிட்டவற்றுக்கான ஊழியர்களின் நிறுவனத்தின் பங்களிப்பு ரூ. 7.5 லட்சத்தைத் தாண்டினால், ஊழியர்களின் NPS கணக்கிற்கு நிறுவனத்தின் பங்களிப்பு மீது வரி விதிக்கப்படும்.

 

No comments