மாணவர் உயிரிழப்பு எதிரொலி... பள்ளி வாகனங்கள் தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கல்:
ஆழ்வார் திருநகரில் பள்ளி வளாகத்தில் வேன் மோதி மாணவன் உயிரிழந்த நிலையில், பள்ளி வாகனங்கள் தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சில அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் இளங்கோவன் நகரை சேர்ந்தவர்கள் வெற்றிவேல்- ஜெனிபர் தம்பதியினர் மகனான 7 வயதான தீக்ஷீத் நேற்று பள்ளி வேன் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளி வேன், பேருந்துகள் தொடர்பாக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வீடுகளில் இருந்து மாணவர்களை அழைத்துவரும் போது வாகனங்களில் மாணவர்களை ஏற்றி, இறக்க ஓட்டுனருடன் ஒரு உதவியாளர் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளியில் மாணவர்களை இறக்கிவிட்ட பின்னர், பேருந்தின் அருகில் நான்கு புறமும் மாணவர்கள் எவருமில்லை என்பதை உறுதி செய்தபின் வாகனத்தை இயக்க வேண்டும். உரிய கல்வித்தகுதி மற்றும் முறையாக பயிற்சி பெற்று ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள நபர்களை மட்டுமே பணிக்கு நியமிக்க வேண்டும்.
ஓட்டுனர் பள்ளிப் பேருந்தாக பயன்படுத்தும் வாகனங்களை, ஏற்கெனவே குறைந்தபட்சம் 5 ஆண்டு காலம் ஓட்டியதற்கான அனுபவத்தை பெற்றிருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட ஓட்டுனர் ஒரே ஆண்டில் சிவப்பு விளக்கு விதிமீறல், தடம்மாறி ஓட்டுதல், வேறு நபரைக் கொண்டு வாகனத்தை ஓட்டுதல் போன்ற விதிமீறல்களை 2 தடவைக்கு மேல் செய்திருத்தல் கூடாது.
பள்ளி அளவில் அனுமதிக்கப்பட்ட குழு முன், ஒவ்வொரு ஆண்டும் ஓட்டுனர் தனது திறனை நிரூபித்துக் காட்ட வேண்டும். அந்த நேரத்தில் கண் பரிசோதனை செய்திருக்க வேண்டும். 20 முதல் 30 நிமிடங்களுக்கு மேல் பயணம் செய்யத் தேவைப்படாத வகையில் வாகனங்களின் பயணத் தடங்கள் அட்டவணையிடப்பட வேண்டும். பயணத்தின்போது திரைப்பட பாடல்களை ஒலிபரப்பக் கூடாது.
ஓட்டுநரின் குழந்தைகள் மற்றும் குடும்ப புகைப்படம் ஒன்றை ஓட்டுநரின் எதிரில் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர பயன்படுத்தும் வாகனங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை பள்ளித் தாளாளர் அல்லது முதல்வர் உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
No comments