Breaking News

பள்ளிகளில் "ஆசிரியர் மனசு" என ஒரு ஆலோசனைப் பெட்டி வைக்கப்பட வேண்டும்.!

 

பள்ளிகளில் "ஆசிரியர் மனசு" என ஒரு ஆலோசனைப் பெட்டி வைக்கப்பட வேண்டும்.!

பள்ளி மாணவர்கள் சார்ந்த பலவகை செய்திகள் கடந்த சில வாரங்களாக அளவுக்கு அதிகமாக பத்திரிக்கைகளை ஆக்கிரமித்துள்ளன. அவற்றில் மாணவர்கள் பொது இடங்களிலும், பள்ளிகளிலும், பேருந்துகளிலும், தொடர்வண்டிகளிலும், சாலைகளிலும், . . . நடத்திய அத்துமீறிய, ஒழுங்கீனமான செயல்கள் முதன்மையானவை. அவை நம் சமுதாய சீரழிவைப் பறைசாற்றுகின்றன.

                இன்றைய சூழலில் அவை களையப்பட வேண்டியது அவசரமான அவசியம். அவை மட்டுப்படுத்தப்பட வேண்டும்; களையப்பட வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் பயிலும் 5% – 10% மாணவர்களின் அருவருக்கதக்க செயலால் மொத்த மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது. அது இச்சமுதாயத்தை பேரழிவுப்பாதையில் தள்ளும் வல்லமையுடையது.

                மாணவர்களின் மனநிலை, அவர்களின் தவறான செயல்பாடுகள், ஒழுங்கீனங்கள், . . . போன்றவை திடீரென உருவானவை அல்ல. தனிமனித சுதந்திரம், மாணவர் உரிமை, சுயமரியாதை, பெற்றோர், ஆசிரியர்கள் மாணவரைக் கண்டிக்கக்கூடாது, கண்டிக்கும் பெற்றோர்-ஆசிரியர் கண்டிக்கப்படுவது, தண்டிக்கப்படுவது, குறை சொல்லப்பட்ட அல்லது சுட்டிக்காட்டப்பட்ட மாணவரின் தவறான முடிவுகள், தவறுகளைச் சுட்டிக்காட்டிய ஆசிரியர்கள் பட்ட அவமானம், அளவுக்கு மீறிய அரசு சாரா தன்னார்வலர்களின் ஆர்வம், . . . என அனைத்தும் பொதுவெளியிலும், செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் விவாவத்திற்குள்ளாகி, இதற்கெல்லாம் ஆசிரியர்களே காரணம் என்ற கருத்துருவாக்கமும் இத்தகைய செயல்களுக்கு மிக முக்கியமான காரணம்.

                தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள், ஊடகங்கள், போன்றவற்றில் இடம்பெறும் காட்சியமைப்புகள், தனக்குப் பிடிகாதவர்களை எவ்வெவ்வகையில் தண்டிக்கலாம், பிரச்சனைக்குள்ளாக்கலாம், அவமரியாதைக்குள்ளாக்கலாம், பழிவாங்கலாம், பெயரினைக் கெடுக்கலாம், . . . என பயிற்சியளிக்கின்றன அல்லது கற்பிக்கின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும் மாணவர் (தன் சுயமரியாதை கெட்டுவிட்டதாக் கருதும் மாணவர்கள்) தன்னைக் கண்டிக்கும், தன் தவறுகளைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர்களைப் பழிவாங்க எவ்வெல்லைக்கும் சென்றுவிடுகின்றனர். அவர்களின் சினத்திற்கு தூபம் இடுவதுபோல் அவர் வயதைவிட மூத்த நண்பர்களின் தூண்டுதலும் ஒரு காரணம். அவர் ஏற்கெனவே அவ்வாசிரியரால் குற்றம்சாட்டப்படவராகவோ, பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவராகவோ, படிப்பதற்கான வாய்ப்பை இழந்தவராகவோ, ஏதோ ஒரு காரணத்தால் பாதிக்கப்படவராகவோ, சமுதாயத்தால் பாதிக்கப்படவராகவோ, . . . இருக்கலாம்.

                Covid-19 தொற்று காரணமாக பள்ளிக்கு வரும் வாய்ப்பினை பல மாதங்களாக இழந்த மாணவர் கண்டிப்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு, . . . ஆகியவற்றில் குறைந்தவராக இருப்பது உண்மை. பள்ளிக்கு சில மாதங்கள் வந்தாலும் அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுத்த இயலாதா சூழலே பள்ளிகளில் காணப்படுகிறது. \

                பள்ளிக்கு வராத ஒன்றரை ஆண்டுகளில் பெரும்பாலான மாணவ, மாணவியர்கள் குடும்ப சூழ்நிலை, பொருளாதாரச் சூழ்நிலை, பாதுகாப்பற்ற சூழ்நிலை, . . . போன்ற காரணங்களினால் பெற்றோருக்கு ஒத்தாசையாக சில பல வேலைகளுக்குச் சென்று பொருளீட்டி கஷ்டப்பட்டவர்களும், வருமானம் பார்த்தவர்களும் உண்டு. இந்நிகழ்வுகள் கிராமப்புறத்தில் சர்வ சாதாரணம். தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களில் 70% - 80 % மாணவ, மாணவியர் கிராமப்புறத்தைச் சார்ந்தவர்களே! கட்டுப்பாடில்லாத சூழல், நினைத்ததைச் செய்யும் சுதந்திரம், வேலைக்குச் செல்லும் பெற்றோரின் கவனிப்பின்மை, அக்கறையின்மை, பயம், இச்சூழலைப் பயன்படுத்தி அவர்களைத் தவறான பாதைக்கு வழிகாட்டிய நண்பர்கள், வாலிபர்கள், குட்டித் தலைவர்கள், . . . என பலரின் செயல்களால் சுயமிழந்த சில மாணவர்கள் மற்ற மாணவர்களையும் (மேயும் மாட்டை, நக்கும் மாடு கெடுப்பது போல் என்பது சொல்வழக்கு.) தவறான வழிக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றனர்.

                தவறாகச் செயல்படுவோரை ஓரளவுக்கு மேல் ஆசிரியர்கள் கண்டிக்க இயலாத சூழல். ஆசிரியர்களையே எள்ளி நகையாடும் வீடியோக்களைப் பார்க்கும் சில ஆசிரியர்கள் நமக்கு எதற்கு வம்பு? என ஒதுங்கும் சூழல். கண்டிக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அவமானங்கள் நல்ல ஆசிரியர்களையும் ஒதுங்கிக்கொள்ள வழிகோலுகிறது. அத்தகைய வீடியோக்களைப் பார்க்கும் மாணவர்களின் அளவுக்கு மீறிய செயல்பாடு (சமூக ஊடகங்களின் தாக்கம்.) பல ஆசிரியர்கள் நேரடியாகவே மிரட்டப்படும் அவலமும் உள்ளது. இவை சமுதாயச் சீரழிவையே உருவாக்கும்.

                30-40 ஆண்டுகளுக்கு முன் இருந்ததப்பு பண்ணா சாமி கண்ணைக் குத்திடும்என்ற சொல்வழக்கு பெரும்பாலானோரை திருத்தியது; தவறான செயலைச் செய்வதிலிருந்து தடுத்தது. அச்சொல் வழக்கை எள்ளி நகையாடிய இன்றைய சூழல் தவறான வாழ்க்கை முறைக்கு வழிகோலியது.

                மது அருந்துவது தவறான பழக்கமல்ல, சமுதாய மேன்மை, சமூக வாழ்நிலை உயர்வு, . . . என்ற எண்ணங்கள். அத்தகையச் செயல் வீட்டிலும் வீதியிலும், எங்கும் நிகழ்க் கூடிய அன்றாட நிகழ்வே என மனதில் பதிவதும், எளிதில் கிடைக்கும் மது வகைகளும், போதை தரும் பல பொருட்களும் மாணவ, மாணவியர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

                மிகப்பெரும் சீரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் மாணவரைத் தடுத்து நிறுத்தி, நல்வழி காட்டி, நல்ல சமுதாயத்தை உருவாக்க, அச்சமற்ற சமூகத்தையும், இன்பமுள்ள சூழலையும் உருவாக்க வேண்டிய பொன்னான தருணம் இதுவே! பெற்றோர்களும், ஆசிரியர்களும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், . . . இதை உருவாக்க பங்கெடுக்க வேண்டியவர்கள். அனைவருக்கும் அவரவரளவில் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.

                ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்புக்கு உறுதிசெய்ய வேண்டும். ஆசிரியர் மனசு என ஒரு ஆலோசனைப் பெட்டி வைக்கப்பட்டு, ஆசிரியர் பிரச்சனைகளை அறிந்து, அவை களையப்பட வேண்டும்.

 

                அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்பட்ட இந்நிலையில் மாணவரின் தேர்ச்சி, பள்ளியின் தேர்ச்சி என அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதால், மாணவர்கள் பள்ளிக்கு வருவதைத் தவிர்க்கும் சூழல் உள்ளது. மாணவர்களை நெறிப்படுத்துவது, ஒழுங்கீங்களைக் களைவது, மாணவர்களுக்கு வழிகாட்டுவது, . . . என்ற செயல்பாடுகளில் கவனம் செலுத்த இயலவில்லை என்பது பேருண்மை. சுமார் 18 மாதங்களாக கல்வி கற்கும் சூழலில் இல்லாத மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதே கிராமப்புறத்தில் கடினமாக இருந்தது. இன்றளவும் இது சவால் மிகுந்தாகவே உள்ளது. கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரா சூழல் அதிகமாகிறது. அத்தகைய மாணவரே பெரும்பாலான சிக்கல்களுக்கும், சிரமங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் காரணம்.

                மீதமுள்ள இரு மாதங்களில் தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய சூழலில் மாணவரை நெறிப்படுத்துவது என்பது குதிரைக்கொம்பே! இதன் காரணமாக சில மாணவர்களின் கட்டுப்பாடற்றத் தன்மை மேலும் அதிகரிக்கும். அதன் காரணமாக மற்ற மாணவர்களும் பாதிப்படைவர். மாணவர்கள் நலன் கருதியும், கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கிராமப்புற ஏழை மற்றும் நலிவடைந்த மாணவர்களைக் கருத்தில் கொண்டு, தாயுள்ளத்தோடு, முதற்கட்டமாக இக்கல்வியாண்டிலும் பத்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு முதல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும். தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். பெரும் மதிப்பெண்களைக் கொண்ட மதிப்பெண் சான்றிதழை வழங்க வேண்டும். முயற்சியுள்ளவர், தேர்வுக்குப் படித்தவர், பயிற்சி எடுத்தவர் மனம் பாதிக்கப்படாது.  

 

மாணவர் ஒழுங்கீங்களை நெறிப்படுத்த செய்ய வேண்டியவை:

 

                ஊராட்சி ஒன்றிய அளவில் மாணவர் ஆலோசனைக்குழு அமைக்கப்பட வேண்டும். அவற்றில் கல்வியாளர், ஒரு மனநல ஆலோசகர், ஓய்வு பெற்ற ஓர் ஆசிரியர், தன்னார்வலர், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர், தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், இல்லம் தேடி கல்வி நிகழ்வில் உள்ள தன்னார்வலர், . . . உறுப்பினராக இருக்க வேண்டும். அவர்களை மூன்று அல்லது நான்கு குழுக்களாகப் பிரித்து ஊராட்சியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் பார்வையிட வைக்க வேண்டும்.

                அனைத்து குழுக்களும் அனைத்துப் பள்ளிகளையும் பார்வையிடுவதுபோல் திட்டமிட்டுக்கொள்ளலாம். அவர்கள் பள்ளிக்குச் செல்ல போதிய வாகன வசதியை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள தனியார் பள்ளி வாகனங்களைப் பயன்படுத்திக்கொள்ள அப்பள்ளிகளின் உதவியை நாடலாம். தொண்டு நிறுவங்களின் உதவியை கோரிப் பெறலாம். தனியார் நிறுவங்களின் விளம்பரம், பெயர் தாங்கிய வண்டிகளை வழங்க அவர்கள் உதவியை நாடலாம். தனியார் கல்லூரிகளை அணுகலாம். அரசியல்வாதிகளில் உதவியை நாடலாம். நமது ஒரே குறிக்கோள் மாணவர் மனமாற்றம். தரமான கல்வி. அமைதியான வாழியல் சமுதாயம்.

                குழுவினர்களின் செயல்பாடாக,

                உங்கள் பள்ளியில் பிரச்சனைக்கு உரிய மாணவர் யார் என மாணவரிடம் மறைமுகமாக எழுதித்தருமாறு கேட்டுப்பெறலாம். ஆசிரியர்களுக்கு உள்ள சிக்கல்கள், பிரச்சனைகள் என அவர்களிடம் மறைமுகமாக எழுதித்தருமாறு கேட்டுப் பெறலாம். பள்ளிச் சூழல் கெடுவதற்குக் காரணங்களைக் கேட்டுப்பெறலாம். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைக் கேட்டுப்பெறலாம்.

                அனைத்து குழுக்களும் எல்லா பள்ளிகளையும் பார்வையிட்டு, ஆலோசனைகளை பொதுவாகவும், குறிப்பிட்டும் வழங்கலாம். பள்ளிகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு, ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் தகவல்களைத் திரட்டி ஒன்று சேர்த்து அவற்றைத் தொகுத்து அடுத்த கட்டமாக ஆழ்ந்த ஆலோசனைகளை குறிப்பிட்டவர்களுக்கு வழங்கலாம்.

                பள்ளி அளவிலும், பள்ளி மேலாண்மைக் குழு அளவிலும், ஊராட்சி மன்ற அளவிலும், ஊராட்சி ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் ஆலோசனைக் குழுக்களை அமைக்கலாம்.

                ஒழுங்கீனமான மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆலோசனைகளையும், தொடர்ந்து பிரச்சனைக்குரிய மாணவர்களை அடுத்த அளவில் உள்ள ஆலோசனைக் குழுக்களை அணுக வழிகாட்டலாம். திருந்தாத மாணவர்களுக்கு குறு, சிறு தண்டனைகள் வழங்கலாம்.

                ஒழுங்கீனத்தால் வரும் அவப்பெயரையும், அதனால் வரும் பெற்றோரின் அமைதியின்மையும், சுயச் சீரழிவையும், சமூக அவலத்தையும் ஒளிஒலிப் படங்களாகக் காட்டி அவர்களை நல்வழிப்படுத்தலாம்.

 

               

               

பள்ளி என்பது நாளைய மனிதனின் மனதைப் பண்படுத்துவது! இன்றைய மாணவரே நாளைய குடிமகன்! மாணவர் பலவகையான எண்ணம், சிந்தனை உடையவர். எல்லோருக்கும் ஒரே வகையில் பண்படுத்துவது, கற்பிப்பது என்பது இயலாது.

 

கல்வி ன்பது அறியாமை அகற்றுவது. அப்பணியினை ப்பழுக்கில்லாத வண்ணம் நிகழ்த்தும் இடம் பள்ளி. பள்ளி என்பது கட்டிடங்களாலும், பொருட்களாலும், வசதிகளாலும் நிரம்பிய இடம் மட்டுமன்று. உயிருள்ள மாணவர்களும், ஆசிரியர்களும், பணியாளர்களும் உள்ள இடம்.

 

வகுப்பறை என்பது ஆசிரியரின் முழு சுதந்திரமான ஆளுகைக்கு உட்பட்ட இடம். கற்பிப்பது, கற்றலை உறுதிப்படுத்துவது, கற்ற்லில் ஏற்படும் குறைபாட்டினை கண்டறிந்து களைவது, குறைதீர் கற்றல் நிகழக் காரணமாயிருப்பது, கற்றல் அடைவினை உறுதி செய்வது, கற்றல் அடைவினைச் சோதித்தறிவது, மாணவர் மனபிறழ்ச்சியை அறிவது, அதை நீக்க முயல்வது, மாணவர் வயதிற்கேற்ற உளவியல், சமூகவியல், பொருளாதார, சூழியல், . . . போன்றவற்றின் தாக்கங்களை அறியவும், களையவும், கற்றலில் நாட்டத்தினை ஏற்படுத்துவதும் ஆசிரியர்களே!

 

பலரின் அரிய உழைப்பாலும், கடின வழிகாட்டுதலாலும் நேற்றைய சமூக முன்னேறியது! நாளைய சமுதாயம்                                                                                                                                            

 

இனிமையாக வாழ வழிகாண்போம்!

No comments