Breaking News

முற்றிலும் திரவ உணவு முறை பாதுகாப்பானதா? ஆபத்துகள் என்னென்ன?

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன், கடந்த வெள்ளிக்கிழமை இயற்கையான காரணங்களால் உயிரிழந்தார். இந்நிலையில், விரைவாக உடல் எடையை குறைக்க 14 நாட்களாக அவர் திரவ உணவு முறையைப் பின்பற்றியதாக கூறப்படுகிறது.

இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவர் ஒரு பழைய புகைப்படத்தை ட்வீட் செய்து, "ஜூலைக்குள், சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்த வடிவத்திற்கு திரும்ப வேண்டும் என்பது இலக்கு." என்று தெரித்திருந்தார்.

இதற்கு முன்பு அவர் பலமுறை முயற்சித்த உணவு முறைதான் இது என்று ஷேன் வார்னின் நண்பர்கள் தெரிவித்தனர். மேலும் அவரது திடீர் மரணத்திற்கும் இந்த உணவு முறைக்கும் தொடர்பு இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை.

இந்த உணவுகள் எவ்வளவு பாதுகாப்பானவை மற்றும் அவை உடலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?

பல்வேறு வகையான திரவ உணவுமுறைகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும், `குறைவான கலோரிகளை உட்கொள்வதன் மூலம் விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டும்` என்ற ஒரே நோக்கத்தையே கொண்டுள்ளன.

உடலில் உள்ள நச்சை நீக்கி சுத்தப்படுத்தக்கூடிய, பழ, காய்கறி ஜூஸ் முதல் குறைந்த கலோரிகள் கொண்ட மில்க் ஷேக்குகள் மற்றும் சூப்கள் வரை இந்த உணவுமுறை பட்டியலில் அடங்கும்.

ஆனால் தீவிரமான இந்த உணவு முறைகளால் உடல்நலத்துக்கு தீங்கு என்பதுடன் பெரும்பாலான மக்களுக்கு பொருந்தாது என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒரு நாளுக்கு 800 கலோரிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்படியான உணவு முறையை குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையான NHS பரிந்துரைக்கிறது; குறிப்பாக பருமனான அல்லது கடுமையான பருமனுடன் டைப்-2 நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு மட்டும்.

பல்வேறு மருத்துவ கண்காணிப்புகள் மற்றும் ஆதரவுகளோடு இந்த உணவுமுறை சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதேபோல இதில் ஒரு நாளைக்கு தேவையான சத்துக்களும் இருக்கின்றன. எனினும் பொதுவாக ஆன்லைனில் காணப்படும் பிற திரவ உணவுமுறைகள் அவ்வாறானதாக இல்லை.

"ஜூஸ் உணவு முறை மக்களை எளிதில் ஈர்க்கிறது. காரணம், அவர்கள் விரைவான தீர்வை விரும்புகிறார்கள். ஆனால் உணவுக் கட்டுப்பாடு என்பது மிகவும் கடினமானது" என்கிறார் பிரிட்டனில் உள்ள உணவுமுறைகள் குறித்த அமைப்பை சேரந்த ஐஸ்லிங் பிகோட்.

"ஜூஸ் போன்ற திரவ உணவுக்கு நமது உணவில் ஒரு பங்கு உள்ளது. ஆனால், இந்த ஒரு பங்கு என்பது எல்லோருக்கும் பொருந்துவதில்லை.

"அதேசமயம் சரியான உடல் எடை கொண்டவர்களிடம் இதை விளம்பரப்படுத்துவது கவலைக்குறிய ஒன்றாக உள்ளது," என்றார் அவர்.

பழம் அல்லது காய்கறி ஜூஸ் உங்களுக்கு நிறைய தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்கும். ஆனால் மிகக் குறைந்த அளவில்தான் புரதம் அல்லது கொழுப்பு கிடைக்கும்.

தோல் மற்றும் விதைகள் உட்பட முழு பழத்தையும் கூழ் செய்து சேர்க்காவிட்டால் உங்களுக்கு நார்ச்சத்து கூட பற்றாக்குறையாகி விடும்.

பிளைமவுத் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து துறை இணை பேராசிரியர் டாக்டர் கெயில் ரீஸ் கூறுகையில், "இந்த உணவு முறையில் ஒரு வாரத்திற்குப் பிறகு நீங்கள் சோர்வாக உணர்வீர்கள்," என்றார்.

ஊட்டச்சத்து சமநிலை இல்லாத, உடலுக்குத் தேவையான அனைத்தையும் கொடுக்காத உணவுமுறை நீண்ட நாட்களுக்குத் தொடரும்பட்சத்தில், அது "மிகுந்த பாதிப்பைத் தரக்கூடியதாக இருக்கலாம்" என்றும் அவர் கூறுகிறார்.

உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் இரும்புசத்து பயன்படுத்தப்பட்டு விடும். இது பெண்களுக்கு இரத்த சோகை வர வழிவகுக்கும். தசையின் வலு குறையும் மற்றும் குடல், நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகியவை உங்கள் உடலை இயல்பாக செயல்பட வைக்கவே கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

அத்துடன், தலைவலி, தலைச்சுற்றல், கடும் சோர்வு, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஆகிய பக்க விளைவுகளுக்கும் சாத்தியமுண்டு.

நிறைய இயற்கை அமிலங்களைக் கொண்ட பழச்சாறுகள், பற்களில் உள்ள ஈறுகளை தேய்த்துவிடுவதோடு, கலோரிகள் இல்லாததால் சுவாசமும் வித்தியாசமான வாசனையை உண்டாக்கும்.

திரவ உணவில் விரைவாக உடல் எடையை குறைப்பது சாத்தியம், ஆனால் பிகோட்டின் கூற்றுப்படி, மிகப்பெரிய சவால் "யோ-யோ ஆபத்து". அதாவது, உணவுமுறை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும்போது எடை கூடும் ஆபத்து."அதீத உணவுக்கட்டுப்பாடு, உடல் எடையை குறைப்பதற்கு ஒரு நிலையான தீர்வாகாது, ஏனெனில் இழக்கப்படும் எடையின் பெரும்பகுதி நீர் அல்லது மெலிந்த தசையாக இருக்கலாம்" என்று பிரிட்டிஷ் ஊட்டச்சத்து அறக்கட்டளையின் டாக்டர் சைமன் ஸ்டீன்சன் கூறுகிறார்.

"இந்த வகையான துரித டயட்கள், பித்தப்பையில் கற்களை உருவாக்குவதுடன், சில உடல்நல அபாயங்களுக்கும் வழிவகுக்கும்."

டாக்டர் ஸ்டீன்சன் "எடை சுழற்சி" முறை பற்றி எச்சரிக்கிறார். அதாவது குறிப்பிட்ட எடைக்குள் தொடர்ந்து இருப்பதற்காக, உடல் எடையை குறைக்கும் மற்றும் திரும்பப்பெறும் விதமான உணவுப்பழக்கம் இது. இதன் விளைவாக, உடலில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம்.

எடையைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த வழி, பல்வேறு பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பீன்ஸ், கொட்டைகள் மற்றும் விதைகள் என பலதரப்பட்ட சமமான உணவுகளை உட்கொள்வது அதனுடன் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதும் இதற்கான வழிதான்.

விரைவான மாற்றத்துக்காக இப்படி ஒரு "திரவ உணவுமுறை"யில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, உடலுக்கு தேவையற்ற கலோரிகளை வழங்கும் மது, நொறுக்குத்தீனி, பிஸ்கட் ஆகிய உணவுகளை நீக்குமாறு டாக்டர் ரீஸ் பரிந்துரைக்கிறார்.

மேலும் உங்களுக்கு ஏதேனும் அடிப்படை உடல்நலக் குறைபாடுகள் இருந்தால், ஏதேனும் உணவுமுறையை தொடங்குவதற்கு முன் எப்போதும் ஒரு உணவியல் நிபுணரை கலந்தாலோசிக்கவும்.

சரியான முறையில் மேற்கொள்ளப்படும், திரவ உணவுமுறைகள், அதிக எடை கொண்டவர்களுக்கான குறைந்த கலோரி திட்டங்கள் போன்றவை பலனளிக்கும் என்று நிரூபிக்கப்பட்டவைதான். ஆனால் பலருக்கு, அவற்றைப் பின்பற்றுவது கடினமாகவும் தேவையற்ற அபாயமாகவும் இருக்கலாம்.

No comments