Breaking News

நீட்டில் 698 மதிப்பெண் பெற்றதாக போலி சான்றிதழ்.. சென்னை மருத்துவக் கல்லூரியில் வசமாக சிக்கிய மாணவர்:

 


நீட் தேர்வில் 698 மதிப்பெண் பெற்றதாக போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து சென்னை மருத்துவ கல்லூரியில் சேர முயன்ற மேடவாக்கம் மாணவரை போலீசார் கைது செய்தனர்.

போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்ததாக கூறப்படும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும், அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்களால் சேர முடியும். நீட் தேர்வில் வெற்றி பெற்று குறைவான மதிப்பெண் எடுத்தால், அவர்கள் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சுயநிதி கோட்டாவில் கோடிகளை கொட்டித்தான் சேர முடியும். ஐந்து வருடம் அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்து மருத்துவம் படித்தால் சில ஆயிரம் மட்டுமே செலவாகும். ஆனால் சுயநிதி கல்லூரிகளை பொறுத்தவரை பல லட்சம் ரூபாய் ஒவ்வொரு செமஸ்டருக்குமே கட்ட வேண்டியதிருக்கும்.

இதனால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க பல மாணவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். அப்படி உழைத்தாலும், 12ம் வகுப்பு முடிதது. குறைந்தது ஓராண்டு தனியாக பயிற்சி எடுத்தால் மட்டுமே நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க முடியும் என்ற நிலை இருப்பதாக மாணவர்கள் கூறுகிறார்கள். அதுவும் லட்சங்களில் செலவு செய்து தனியார் கோச்சிங் கிளாஸ் சென்று பயிற்சி எடுத்தால் தான் நீட் தேர்வில் வெல்ல முடியும் என்கிற நிலை உள்ளதாகவும் மாணவர்கள் கூறுகிறார்கள். இந்த சூழலில் நீட் தேர்வில், தேர்ச்சி பெற முடியாத மற்றும் அதிக மதிப்பெண் எடுக்க முடியாத சில மாணவர்கள் ஆள் மாறாட்டத்தில் ஈடுபடுவது, அதிக மதிப்பெண் எடுத்ததாக போலி சான்றிதழ்களுடன் கல்லூரிகளில் சேர முயற்சிப்பது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. அப்படித்தான் சென்னை மருத்துவக்கல்லூரியில் நடந்துள்ளது.

சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த 18 வயதாகும் மாணவர் லட்சாய்( கடந்த 2023-ம் ஆண்டு நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் அப்போது அதிக மதிப்பெண் கிடைக்கவில்லை.. இதேபோல் நடப்பு ஆண்டில் நீட் தேர்வு எழுதினார். இதில் அவர் குறைந்த மதிப்பெண்ணே பெற்றுள்ளார். இதனால் மாணவர் லட்சாய், நினைத்த அரசு கல்லூரியில் சேர முடியவில்லை. இதையடுத்து அவர் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் சேர முடிவு செய்தார். இதற்காக அவர் நீட் தேர்வில் 698 மதிப்பெண் பெற்றதாக போலி மதிப்பெண் சான்றிதழ் மற்றும் சென்னை மருத்துவ கல்லூரியின் சேர்க்கை படிவத்தையும் போலியாக தயார் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் சம்பவத்தன்று தனது பெற்றோருடன் கல்லூரியை அணுகி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

அந்த ஆவணங்களை கல்லூரி நிர்வாகம் ஆய்வு செய்தபோது சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து சென்னை மருத்துவ கல்லூரி நிர்வாகம், சென்னையில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதில் மாணவர் லட்சாய் சமர்பித்த ஆவணங்கள் போலியானது என்பது ஆய்வில் தெரியவந்தது. இது குறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் மாணவர் லட்சாயை கைது செய்தனர். மேலும் அவருக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்ததாக கூறப்படும் 2 பேரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

No comments