Breaking News

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. இதெல்லாம்தான் காரணமா? இந்த சின்ன சின்ன அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க:

 


சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்று சொல்லப்படும் அமைதியான மாரடைப்பு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

ஆரம்பக்கட்டத்தில் இதனை அறிய முடியுமா?

இந்தியாவை பொறுத்தவரை, ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் வரை மாரடைப்பு காரணமாக உயிரிழக்கிறார்கள். இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடுத்து நிறுத்தப்படுவதால், ஏற்படும் விளைவுதான் ஹார்ட் அட்டாக் ஆகும்..

கொழுப்புக்கட்டி: தமனிகள், ரத்தக்குழாய்களில் கொழுப்புக்கட்டியாக மாறுவதில் இதுபோன்ற அடைப்புகள் ஏற்பட்டுவிடுகின்றன.. இதயத்திற்கு ரத்தத்தை சப்ளைசெய்யும் ரத்தக்குழாயில் முழு அடைப்பு ஏற்பட்டால், வலி ஏற்படும். இதுவே மாரடைப்பின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.

சாதாரண மாரடைப்பில் நோயாளிக்கு இடது தோள் பட்டையில் வலி, நெஞ்சில் வலி, வியர்த்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.. இதனால் பாதிக்கப்பட்டவர்களை உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை தரமுடியும்.

ஆனால், சைலன்ட் ஹார்ட் அட்டாக்குகள், மிகமிக குறைவான அறிகுறிகளுடனேயே ஏற்படும்.. சிலருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லாமலும் இருக்கலாம். நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் என்று நினைத்துக்கொண்டு, இதனை பலரும் புறக்கணித்துவிடுவதே ஆபத்தில் போய் முடிகிறது. ஹார்ட் அட்டாக்கைவிட கொடியது, இந்த சைலண்ட் ஹார்ட் அட்டாக்.

காரணங்கள்: இது தூங்கும்போதும் வரலாம்.. விழித்திருக்கும்போதும் வரலாம்.. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே மாரடைப்புக்கு அடிப்படையாகின்றன.. குறைவான தூக்கம், ஊட்டச்சத்து இல்லாத உணவு, கொலஸ்ட்ரால், உடல் பருமன், உடல் உழைப்பில்லாதது, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், முதுமை, புகைபிடித்தல், குடும்பத்தில் இதய நோய் உள்ளது, மெனோபாஸ் போன்றவை எல்லாமே சைலன்ட் ஹார்ட் அட்டாக்கிற்கான காரணங்களாக அமைந்துவிடுகின்றன..

ஆய்வு ஒன்றில், எந்த வித இருதய நோயும் இல்லாதவர்களுக்கு கூட 10 ஆண்டுகளில் மாரடைப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது... அதிலும், இந்த சைலண்ட் ஹார்ட் அட்டாக்குகள், சர்க்கரை நோயாளிகள் அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

மாரடைப்பு: அதேபோல, மாரடைப்பு ஏற்படாத பெண்களுடன் ஒப்பிடும்போது, சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஏற்படும் பெண்கள் உயிரிழக்க 58 சதவீதம் அதிகம் என்றும், மாரடைப்பு இல்லாத ஆண்களுடன் ஒப்பிடும்போது சைலண்ட் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால் ஆண்கள் உயிரிழக்க 23 சதவீதம் மட்டுமே வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரியவந்தது.

மார்பு வலி அல்லது மார்பில் அசௌகரியமான உணர்வு ஏற்படுதல், மயக்கம், சுவாசிப்பதில் சிரமம், பலவீனம், தாடை, கழுத்து அல்லது முதுகில் வலி, கைகள், தோள்களில் அசௌகரியமான உணர்வு போன்றவை ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் அணுக வேண்டும்.

அறிகுறிகள்: அதாவது, சின்ன சின்ன அறிகுறியாக இருந்தாலும் அலட்சியப்படுத்தக்கூடாது என்கிறார்கள் டாக்டர்கள்.. குறிப்பாக, காரணமில்லாத சோர்வாகவும், களைப்பாகவும் இருந்தால், அது சைலண்ட் ஹார்ட் அட்டாக்கின் அறிகுறியாகவும் இருக்கலாம்.. எந்தவித உடல் இயக்கமும் இல்லாமல் இருக்கும்போதும்கூட, மூச்சுவிடுவதில் சிரமம், எந்தவித உடல் இயக்கமும் இல்லாமல் இருக்கும்போது அதிகமாக வியர்த்தல் போன்றவைகள் அமைதியான மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.

கைகள், கழுத்து, தாடை, முதுகில் வலி அல்லது அசௌகரியம், தொடர்ச்சியான குமட்டல், தலைவலி, தலைசுற்றல், போன்றவை இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். இந்த அறிகுறிகளுடன், மற்ற அறிகுறிகளும் சேரும்போது, உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும்.. ஒருவேளை, இது சைலண்ட் ஹார்ட் அட்டாக் இல்லாவிட்டாலும்கூட, டாக்டரிடம் சென்று பரிசோதித்து கொள்வது நல்லது.

No comments