Breaking News

உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிப் பட்டியல் அனுப்ப உத்தரவு :

 

ஆதிதிராவிடர் நலத் துறையின் உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை அனுப்ப வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாவட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையின்கீழ் 108 உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு கடந்த மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி தகுதியான உதவிக் கல்வி அலுவலர், பள்ளி துணை ஆய்வாளர், நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், காப்பாளர் (முதுநிலை ஆசிரியர் நீங்கலாக) ஆகியோரின் பெயர்ப் பட்டியலை அனுப்ப வேண்டும்.

அந்தப் பட்டியலுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்) தேர்ச்சி பெற்றதற்கான நகல், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் நியமன ஆணை உட்பட ஆவணங்களை இணைக்க வேண்டும். தகுதியான ஆசிரியர்கள் எவரும் இல்லையெனில் அதற்குரிய ‘இன்மை’ அறிக்கையை சமர்பிக்க வேண்டும். இதற்கிடையே பட்டியலில் இருந்து தகுதி பெற்றவர்களின் பெயர் விடுபட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலர் முழுப் பொறுப்பு ஏற்க நேரிடும். எனவே, மாவட்ட அலுவலர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments