Breaking News

மீண்டும் தகுதி தேர்வு நடத்துவதை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்…!

WhatsApp-Image-2024-08-05-at-2.58.44-PM-copy-750x430

ஆசிரியர் நியமனங்களில் 2013-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று  11 ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 40ஆயிரம் ஆசிரியர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பணி வழங்க வேண்டும்.  அரசாணை 149-ஐ முற்றிலுமாக நீக்கிட வேண்டும்.  திமுக தேர்தல் அறிக்கை 177- ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக இன்று(05-08-2024)  தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.  மாநிலத் தலைவர் வடிவேல் சுந்தர், மாநில செயலாளர் சண்முகப்பிரியா, மாநில பொருளாளர் ஹரிஹரசுதன், மாநில அமைப்பாளர் ஸ்ரீதர், மாநில பொறுப்பாளர் ஏகாம்பரம் மற்றும் நிர்வாகிகள் திருச்சி வடிவேல்,  சிவக்குமார், முருகன், ராமச்சந்திரன், சுகுணாதேவி, அன்பரசு, தினேஷ் பாபு, பிரபாகரன் உள்பட மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறுகையில்,  கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் 40 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு இதுவரை ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை.  இவர்கள் கடந்த 11 ஆண்டு காலமாக அடிப்படை வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள்.

இவர்கள் தங்களுக்கு வேலை கேட்டு உண்ணாவிரதம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம், டெட் சான்றிதழ் ஒப்படைப்பு போன்ற என 60க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை. தங்களை விட மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள் நீதிமன்றத்தை நாடி சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளனர்.

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் 40 ஆயிரம் ஆசிரியர்களையும் பணி நியமனம் செய்ய வேண்டும்.  தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு இன்னொரு நியமனத் தேர்வு என்ற அரசாணை  149-ஐ ரத்து செய்ய வேண்டும்.  திமுக தலைமையிலான தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதி 177-ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.  தேர்ச்சி பெற்றும் நியமனத் தேர்வு என்ற நிர்பந்தத்தால் உயிரை விட்ட ஆசிரியர் மாலதியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். எங்களை தொகுப்பூதியத்தில் பணியமர்த்த கோரி இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னதாகவே உங்கள் தொகுதியில் முதல்வர் செயலியில் 2 ஆயிரம் கோரிக்கை மனுக்கள் பதிவு செய்துள்ளோம். அதுவும் நிலுவையில் உள்ளது.  எனவே, தமிழக முதல்வர் எங்கள் பிரச்சனையில் தனி கவனம் செலுத்தி விரைவில் தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும்  என்று கூறினர்.

No comments