சர்க்கரை நோயாளிகள் மதிய உணவு சாப்பிடும்போது இந்த தவறுகளை தெரியாமகூட செஞ்சுரக் கூடாது... இல்லனா ஆபத்துதான்!
நம் தாத்தா பாட்டி காலத்தில் சர்க்கரை நோய் என்ற ஒன்று இருந்ததாகவே தெரியவில்லை. மூன்று நேரமும் வகைவகையாய் சாப்பிட்ட பெரியவர்கள் கூட 90 வயதிலும் ஆரோக்கியத்தோடுதான் இருந்தார்கள்.
நமக்கு முந்திய தலைமுறைக்கு கூட 40 வயதிற்கு மேல் தான் சர்க்கரை நோய் என்ற ஒன்று பரவலாக காணப்பட்டது. நாம் 30 வயதிற்குள்ளேயும், ஏன் குழந்தைகளே தற்போது சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் நமது முறையற்ற உணவு பழக்கமும், நேரம் தவறி சாப்பிடுவதும் சில நேரத்தில் காரணமாக அமைகிறது.
தற்போது நாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறோம் என, காலை மற்றும் இரவு உணவை மட்டுமே கவனத்தில் கொள்கிறோம். ஆனால் மதிய உணவில் கவனம் செலுத்துவதில்லை. நீங்களும் அதில் ஒருவரா? அது ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. அதிலும் குறிப்பாக சர்க்கரை நோயாளிக்களுக்கு நல்லதல்ல. சர்க்கரை நோயாளிகள் குறிப்பாக என்ன குடிக்கிறோம் அல்லது சாப்பிடுகிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏன்னென்றால், சில உணவுகள் விரைவாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க கூடியவை. இதை தவிர்க்க, மதிய உணவு நேரத்தில் தவிர்க்க வேண்டியவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.
சரிவிகித உணவு உட்கொள்ளாமை
உங்கள் தட்டு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் நன்கு சமநிலையில் காய்கறிகளுடன் மதிய உணவில் நிரம்பி இருக்க வேண்டியது அவசியம். இதில் உடலுக்கு நாளொன்றுக்கு தேவைப்படும் புரதம், மற்றும் நார்சத்து சம அளவிலும், கார்போஹைட்ரேட்டுகள் மிதமான அளவிலும் இருக்க வேண்டும்.
பொதுவான நம்பிக்கைக்கு மாற்றாக, கார்போஹைட்ரேட்டுகள் சில நன்மைகளை அளிக்க கூடியது. ஆனால், அது நீங்கள் ஆரோக்கியமான உணவுகளின் மூலம் எடுக்கும் போது மட்டுமே. நீங்கள் கினோவா, பழுப்பு அரிசி மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை முயற்சிக்கலாம். இரத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, சரிவிகித உணவை உண்ண வேண்டியது அவசியம்.
இனிப்பு சட்டினி மற்றும் அப்பளம் சாப்பிடுதல்
பெரும்பாலானவர்களுக்கு இனிப்பு வகையும், அப்பளமும் மதிய உணவில் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி விரும்புபவர்கள் நன்றாக கேட்டு கொள்ளுங்கள், இவை உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். காரமான உணவுகளை சாப்பிடுவது பரவாயில்லை, ஆனால் இனிப்பு வகைகள் இரத்த சர்க்கரை அளவை மிக விரைவாக அதிகரிக்கும் என்பதால், இவற்றை தவிர்ப்பது நல்லது.
அப்புறம், அப்பளத்தை மறந்துட்டேன்! நீங்களும் மறந்துவிடுவது நல்லது. ஏன்னென்றால், சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படும் அப்பளங்கள், நன்றாக எண்ணெயில் வறுக்கப்படுவதால், இது மதிய உணவில் ஆரோக்கியமற்றதாக இருக்கும் மற்றொரு பொருளாகும்.
முறையற்ற மதிய உணவு நேரம்
ஒருநாள் மதியம் ஒரு மணி, அடுத்த நாள் நான்கு மணி என முறையற்ற நேரங்களில், மதிய உணவை சாப்பிடக்கூடாது. மதிய உணவிற்கு என சரியான நேரம் ஒதுக்கி, தினசரி அதே நேரத்தில் மதிய உணவை சாப்பிடுவது சிறந்தது. இன்றைக்கு வேலையில் இருக்கும் நாம், அதீத வேலை பளுவின் காரணமாக மதிய உணவின் நேரத்தை மாற்றுவதும் இதற்கு காரணமாகிறது.
தினசரி பின்பற்றுவது கடினமாக இருந்தாலும் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். ஒரு வழக்கமான பழக்கத்திற்கு கொண்டு வர இந்த நடைமுறை உங்களுக்கு உதவுகிறது. மேலும், இரத்த சர்க்கரை அளவுகளில் திடீர் கூர்முனைகளைத் தடுக்கிறது. முடிந்தவரை, நீங்கள் மதிய உணவை தாமதப்படுத்துவதை பற்றி ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுங்கள்.
பொறித்த உணவுகள்
பொறித்த உணவுகளை மதிய உணவு நேரத்தில் எடுத்து கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொறித்த உணவுகளில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் உப்பு சர்க்கரை இருப்பவர்களுக்கு மிகவும் ஆரோக்கியம் இல்லாத ஒன்று. உங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, கோஃப்த்தா போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதிக நார்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை அதற்கு மாற்றாக எடுத்துக் கொள்ளலாம். இவை பெரிதும் நம்மை பயக்க கூடியவை.
சர்க்கரை சேர்த்த உணவுகள்/பானங்கள்
சர்க்கரை சேர்த்த உணவுகள் தவிர்க்கப்பட்டது போல் சர்க்கரை அதிக அளவில் இருக்கும் பழங்கள் மற்றும் குளிர்பானங்களையும் மதிய உணவில் தவிர்க்க வேண்டும். இதில் மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், மற்றும் லிச்சிஸ் போன்றவற்றையும் அடங்கும். கடைகளில் கிடைக்கும் அனைத்து குளிர்பானங்களில் செறிவூட்டப்பட்ட சர்க்கரை அதிக அளவில் இருக்கிறது. இவற்றை சர்க்கரை நோயாளிகள் குறைத்து கொள்வது நல்லது அல்லது முற்றிலும் சாப்பிடாமல் இருப்பது சிறந்தது.
No comments