Breaking News

பௌர்ணமியில் திருச்செந்தூரில் தங்கி வழிபடுவது சரியா? - உண்மை என்ன?

 


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த குரு பரிகார ஸ்தலமாகவும் திகழ்கிறது.

இங்கு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோயிலில் நாழிக்கிணறு, வள்ளிக்குகை, தூண்டுகை விநாயகர் உள்ளிட்ட இடங்கள் அமைந்துள்ளது. தென் தமிழத்தின் மிக முக்கியமான ஆன்மிக தலமாக திகழும் திருச்செந்தூருக்கு உலகம் முழுவதும் இருந்து மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனால் எப்போதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். இப்படியான நிலையில் கடந்த சில மாதங்களாக பௌர்ணமி நாளில் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பௌர்ணமி தினத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் தங்கி சாமி தரிசனம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என பக்தர்கள் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. அதன் பின்னணி என்ன? என்பது பற்றி காணலாம்.

Aavani Month: கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி.. ஆவணி மாதத்தின் முக்கிய விசேஷ தினங்கள் என்னென்ன?

பல்வேறு ஊர்களில் இருந்து வருகை தரும் பக்தர்கள் பௌர்ணமி நாளில் குடும்பமாக கடற்கரையில் தங்கியிருந்து பரிகாரம் செய்து அதிகாலையில் நீராடி சாமி தரிசனம் செய்கின்றனர். இதன் காரணமாக பௌர்ணமி இரவில் கடற்கரையில் கால் வைக்கக்கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால் உண்மையில் பௌர்ணமி தினத்தில் திருச்செந்தூரில் இப்படி ஒரு வழிபாட்டு முறை பின்பற்றப்படுகிறதா எனக் கேட்டால் இத்தனை ஆண்டுகாலமாக அது வழக்கத்தில் இல்லவே இல்லை என்பதே உண்மை.

யாரோ ஒருவர் கிளப்பிவிட்ட தகவல் காரணமாகவே இப்படியான கூட்டம் கூடுகிறது என சொல்லப்படுகிறது. எப்போது வார இறுதி நாட்கள், வார நாட்களில் ஏதாவது விசேஷ தினம் என்றால் திருச்செந்தூர் பக்தர்கள் கூட்டத்தால் திணறும். இப்படி இருக்கும் நிலையில் பௌர்ணமி இரவு தங்கினால் நல்லது என சொன்னதை நம்பி கைக்குழந்தைகளை கூட தூக்கிக்கொண்டு கூட்டம் கூட்டமாக பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆனால் பௌர்ணமி நாளில் திருச்செந்தூரில் இரவு கடற்கரையில் தங்க வேண்டும் என்று எந்த சாஸ்திரத்திலும் சொல்லப்படவில்லை.

அதேசமயம் ஜாதகத்தில் குருவின் பார்வை குறைவாக இருந்தால் திருச்செந்தூர் சென்று வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது. மேலும் பௌர்ணமி நாளில் சித்தர் பீடங்கள் உள்ள இடங்களில் இரவு தங்கியிருந்து தரிசனம் செய்தால் நல்லது என கணிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில் திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே மூவர் சமாதி உள்ளது. எனவே சித்தர்களின் அருளைப் பெற தங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஒருவருக்குத் தனிபட்ட முறையில் சொல்லப்பட்ட பரிகாரத்தை எல்லாரும் செய்வதால் எந்த பலனுமில்லை. எனவே இத்தகைய கூட்டத்துக்கு நடுவே குழந்தைகளை கூப்பிட்டுப் போய் சிரமப்பட வேண்டுமா என நன்கு சிந்தித்துக் கொள்ளுங்கள். திருச்செந்தூர் மண்ணை மிதித்து சாமி தரிசனம் செய்தால் நாம் செய்த பாவங்கள் அகலும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. அப்படியிருக்கையில் ஆன்மிக பயணம் என்ற பெயரில் அவதிப்பட வேண்டாம் என உள்ளூர் மக்கள் பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments