Breaking News

செருப்புக்காக நடந்த சண்டை.. நாமக்கல் பள்ளி மாணவன் பலியான சம்பவத்தில் வெளியான 'ஷாக்' தகவல்!

 

நாமக்கல் அருகே பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் கிளம்பும்போது செருப்பு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் மரணத்தில் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்த வரகூர் அரசு பள்ளியில் இரு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். 11ஆம் வகுப்பு மாணவர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அந்த மாணவர் உயிரிழந்துள்ளார். பள்ளி மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோதலில் உயிரிழந்தவர் ஆகாஷ் (16) என்பதும், அவர் நவலடிபட்டியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், மாணவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது பற்றியும் விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எருமப்பட்டி அருகே உள்ள நவலடிபட்டியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநரான ரமேஷ். இவரது மகன் ஆகாஷ், வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அதே வகுப்பில், செல்லி பாளையத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி சுப்பிரமணி என்பவரின் மகனும் படித்து வந்துள்ளார்.

நேற்று மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து வீட்டுக்கு கிளம்பும்போது, வகுப்பறை வாசல் ஓரத்தில் விட்டிருந்த ஆகாஷின் செருப்பை காணவில்லையாம். இதனால் கோபமடைந்த அவர், தனது செருப்பை எடுத்து ஒளித்து வைத்தது யார் என அங்கிருந்த மாணவர்களிடம் கேட்டு திட்டியுள்ளார்.

அப்போது செல்லிபாளையத்தைச் சேர்ந்த மாணவன், தான் தான் செருப்பை வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் இருவரும் கடுமையாக தாக்கிக் கொண்டுள்ளனர். மாணவர்கள் விலக்கி விட முயற்சித்தும் தொடர்ந்து அடித்துக் கொண்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் சுருண்டு விழுந்த ஆகாஷ், நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அவரை எழுப்ப முயன்ற நிலையில் அவர் மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து உடனடியாக மாணவர்கள், தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்து, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மாணவர் ஆகாஷ் பலியான நிலையில், எருமப்பட்டி போலீசார் மாணவர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பினர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ஆகாஷ் உடன் சண்டை போட்ட மாணவர், தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வலிப்பு வந்து ஆகாஷ் மயங்கி விழுந்ததாக கூறினார்கள், நாங்கள் எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றபோது, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறினார்கள். அங்கு சென்று பார்த்தபோது எங்கள் மகன் உயிருடன் இல்லை. எங்கள் மகன் இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பலியான ஆகாஷின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே மோதல் சம்பவங்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. சாதிய ரீதியிலான மோதல், போதைப் பொருள் பழக்கம் ஆகியவை பள்ளி மாணவர்களிடையே அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், மாணவர்கள் மோதலில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

No comments