ஆன்லைன் தேர்வை பயன்படுத்தி மோசடி : 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து !
2020ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஆன்லைன் தேர்வில் தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்கள் எனக் குறிப்பிட்டு முறைகேடாக தேர்வு எழுதிய 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
1980-1981ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ளவர்கள் சிறப்பு வாய்ப்பாக இணையதள வாயிலாக தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம் என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, தொலைதூரக் கல்விப் படிப்பில் சேர விண்ணப்பிக்காத பலரும் கடந்த 2020 டிசம்பரில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் முறைகேடாக பங்கேற்று தேர்வு எழுதியுள்ளனர்.
இந்நிலையில், அந்த தேர்வை எழுதி தேர்ச்சியடைந்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் முன் செமஸ்டர் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்டவை தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, தேர்ச்சியடைந்த 117 பேரின் பெயர்கள் அதில் விடுபட்டிருந்ததை பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுபிடித்தது. இதனை அடுத்து அவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்த பல்கலைக்கழகம், முறைகேடு தொடர்பாக ஆராய விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், தொலைதூரக் கல்வி மையங்களை நடத்துவோர் 3 லட்ச ரூபாய் வரை பெற்று மோசடியாக சான்றிதழ்கள் பெற முயற்சித்ததாக சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் குற்றஞ்சாட்டி உள்ளது.
No comments