Breaking News

ஓரு அழகான கதை ஒரு நிமிடம் படிக்கலாமே- மனமே பிரச்சினை-யாரையும் நம்மால் திருத்த முடியாது ஆனால் அவர்களோடு வாழ்வதற்கு நாம் மாற்றிக்கொண்டால் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் அழகுதான்.

மனமே பிரச்சினை

தனியாக வேட்டையாடுவதை விருப்பமாக கொண்ட அரசன் ஒருவன் வழிதவறி காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான்.

காட்டில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருப்பதை கண்டு அன்று இரவுப்பொழுதை அங்கேயே கழிக்கலாம் என்று முனிவரிடம் தங்க அனுமதி கேட்டான்..

முனிவரும் தாராளமாக தங்கி கொள்ளுங்கள் என கூறினார்..

முனிவரும், அரசரும் அந்த சிறிய குடிலில் தூங்க ஆரம்பித்தனர்.

இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த குடிலை சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன.

அரசரால் தூங்கவே
முடியவில்லை.

அவர், அன்று காலை முழுவதும் வேட்டையாடி களைத்து இருந்தார்..

மறுநாளும் அலைச்சல்
இருக்கிறது.

அதை நினைக்க நினைக்க அரசருக்குக் கோபம் அதிகமானது.

நாய்களோ வெறித்தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன.

ஆனால், இத்தனைக்கும் மத்தியில் முனிவர் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.

அவரை எழுப்பிய அரசர்,

''என்ன மனிதர் நீங்கள்...
இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது...???'' என்று புலம்பினார்.

முனிவரோ, தனது வழக்கமான நிதானத்துடன் கூறினார்:

''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை;
கோஷமிடவில்லை
 

அந்த நாய்களுக்கு
இங்கு ஒரு அரசர் தங்கி இருப்பது தெரியாது.
அவைகள் படிப்பதில்லை.
அவற்றுக்கு அறிவும் கிடையாது.

அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன.

நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்...!!!'' என்றார்.

''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்...???'' என்றார் அரசர்.

உடனே முனிவர், ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள்.
அப்படிப் போராடாதீர்கள்
.
பிரச்னை குரைப்பொலி அல்ல,
உங்கள் எதிர்ப்பு உணர்வு.

நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்; இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால் தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை.

நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை.

ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்.

நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன பார்த்தீர்களா....???

ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்...!!!'' என்றார் முனிவர்.

'உதவாக்கரை யோசனை' என்று மனதுக்குள் பழித்தபடி தூங்க போனார் அரசர்.

ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் எழுந்து முனிவரைச் சந்தித்தார் அரசர்...!!!

''ஆச்சரியம்தான்....!!! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன்.

 ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அரசர்.

முனிவர் நமக்குச் சொல்கிறார்:

"இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் கவனத்தை உள்முகமாகத் திருப்பு.

 எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய்.

உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும்;

அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய்.

அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம்..

உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது..
அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.

யாரையும்  நம்மால் திருத்த முடியாது ஆனால் அவர்களோடு வாழ்வதற்கு நாம் மாற்றிக்கொண்டால் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் அழகுதான்.

No comments