ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு கொள்கையில் உள்ள கூடுதல் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்திட ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு கொள்கையில் உள்ள கூடுதல் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்திட வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.
தமிழக அரசு 2021-2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு கொள்கை குறித்த அரசாணையினை (17.12.21) வெளியிட்டுள்ளது. இதன்படி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த அரசு முன்வந்துள்ளதாக தெரிகிறது. அதற்காக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ள கூடுதல் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்திட வேண்டுகிறோம்.
அரசாணையில் ஆசிரியர் மாணவர் விகிதத்திற்கு ஆகஸ்ட் 1ந்தேதி மாணவர் எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பள்ளிகள் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதத்தில் திறக்கப்பட்டது. பள்ளி திறப்புக்கு பிறகும் பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. எனவே புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு டிசம்பர் 1ந்தேதியின் படி உள்ள மாணவர் எண்ணிக்கையினை கணக்கில் கொண்டு பணியிடம் ஏற்படுத்த வேண்டும்.
பரஸ்பர விருப்பத்தின் மூலம் பணிமாறுதல் பெற விருப்புவோர் தொடர்ந்து இரண்டு ஆண்டு பணி புரிவோராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை 1ஆண்டாக குறைக்க வேண்டும்.
முற்றிலும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் பணி நிரவலில் விலக்களிக்கப்பட்டுள்ளது அனைத்து மாற்றுதிறனாளிகளுக்கும் விலக்களிக்க வேண்டும்.
கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியினை சரி செய்திடும் வகையில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் அல்லது தொடக்கப்பள்ளிக்கு குறைந்தது மூன்று ஆசிரியர்கள், 6 முதல் 8 வகுப்புகளுக்கு குறைந்தது 4 ஆசிரியர்கள் என்ற சிறப்புநிலையினை ஏற்படுத்தி இந்த ஆண்டு பணிநிரவல் செய்வதை முற்றிலுமாக கைவிட வேண்டும்.
அரசாணை 404ல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக புதிய திருத்தத்தினை கைவிட்டு ஓராண்டுக்கு ஒருமுறை மலைசுழற்சி என்ற பழைய முறையினை அமல்படுத்த வேண்டும்.
கடந்த கலந்தாய்வில் பணி நிரவலில் சென்றவர்களுக்கும், மழலையர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் முன்னுரிமையின் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்வது குறித்த விளக்க அறிக்கை வெளியிட வேண்டும்.
நிர்வாகத்தேவை ஏற்படும் போதெல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் எந்த நேரத்திலும் இடமாற்றம் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர்களிடம் அச்சத்தையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் ஆசிரியர்கள் பழிவாங்கலும், ஊழலும் அதிகரிக்கும் என்று ஆசிரியர்கள் அஞ்சுகின்றனர். எனவே அம்முறையினை கைவிட வேண்டும். சரியான காரணமின்றி எந்த ஆசிரியரையும் பணிமாறுதல் செய்யக்கூடாது. காரணத்துடன் பணிமாறுதல் செய்யும் நிலை ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் மனவோட்டத்தை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கையாக தெரிவித்துள்ளது. இதனை ஏற்று அரசாணை திருத்தினை வெளியிட்டு விரைவில் பொதுமாறுதல் கலந்தாய்வினை நடத்திட வேண்டும் என மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும், மதிப்புமிகு கல்வித்துறை செயலர் அவர்களையும், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களையும், மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
தங்கள்
(ந.ரெங்கராஜன்)
பொதுச்செயலாளர்
TESTF,
இணைப்பொதுச்செயலாளர்,
AIPTF
No comments