Breaking News

AIFETO 16.12.2021 நமது பள்ளி கல்வித்துறை அமைச்சரா இப்படி பேசுகிறார்? நம்ப முடியவில்லை..! நம்ப முடியவில்லை..!! ‌

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர் சமுதாயத்தின்பால் நன்மதிப் பினை கொண்டவர். 15.12.2021 அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் 33 ஆயிரம் கோடி கல்விக்காக ஒதுக்கப்படுகிற நிதியில் 31 ஆயிரம் கோடி ஆசிரியர்களுக்கு ஊதியமாக செலவாகி விடுகிறது. 2000 கோடியை வைத்துதான் ஏனைய இலவச திட்டத்தை நடத்துகிறோம் என பேசியுள்ளார் . அறிக்கையாக வந்திருந்தால் செய்தித்தாள்கள் மீது பழியைப் போட்டு விடலாம். ஆனால் அவரது குரலிலேயே தான் பேட்டியளித்துள்ளார். பேட்டியில் அவரது அன்பு முகத்தையும் அவரது இனிய குரலினையும் நம்மால் கேட்க முடிந்தது.
>
பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றுகின்ற மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கையினையும் , அலுவலர்கள், அமைச்சுப் பணியாளர்களின் எண்ணிக்கையினையும் தெரிவித்து பெறுகின்ற ஊதியத்தினையும் புள்ளி விபரமாக வெளியிட முன்வந்தால் உண்மை தன்மையை அவர் தெரிந்து கொள்வார். முந்தைய ஆட்சியின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை போல் மனம் போன போக்கெல்லாம் பேசுவது நல்லாட்சி செய்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சிக்கு பெருமையினை கொண்டு வந்து சேர்க்காது. மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு அரசின் வருமானத்தில் 94 விழுக்காடு ஊதியத்தை கொடுத்து விடுகிறோம் 6 விழுக்காடை வைத்து தான் மக்களுக்கு செய்கிறோம் என்று நெஞ்சம் பதறுகிற வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தவறான புள்ளி விபரத்தை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். மொத்த ஜிடிபியில் அவர்கள் பெறும் ஊதியம் 42 விழுக்காடு தான் செலவாகிறது. அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கிற அரசு ஊழியர்கள், கற்பித்தல் பணியில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களுடைய ஊதியத்தினை செலவு கணக்கில் கொண்டுவருவது முறையல்ல என விளக்கமாக அறிக்கை வெளியிட்டிருந்தார். தலைவர் கலைஞர் அவர்கள் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அரணாக ஆட்சியில் இருந்தபோதும் இல்லாதபோதும் விளங்கினார்.

உயர்நீதிமன்ற நீதியரசரின் வெளிப்படைத்தன்மையுடைய கூற்றினை போல் ஒரு முதலமைச்சரால் எந்த அளவிற்கு செய்ய முடியுமோ அன்றாடம் கூடுதலாகவே செய்து வருகிறார். அவரை விமர்சிப்பதற்கு ஒரு எல்லை உண்டு என்று நீதியரசரின் வெளிப்பாடு நமது அரசுக்கு  பெருமையினைத் தேடித் தந்தது. மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றுகின்ற மாவட்ட அளவில் சில அலுவலர்களும் மாநில அளவில் உள்ள சில அலுவலர்களும் நல்லாட்சி நடத்தி வரும் நமது அரசின் மீது ஆசிரியர்களை அன்றாடம் வெறுப்புணர்வு பீறிட்டு வெளிவரும் அளவிற்கு அதிகார வரம்பினை மீறி பாதிப்புகளை  செய்து வருகிறார்கள். பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் பார்வைக்கு பலமுறை கொண்டு வந்தும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

புதிய கல்விக் கொள்கை

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் நுழைய விடமாட்டோம் என்ற கொள்கை முடிவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நிலைப்பாடு தெளிவாக இருந்து வருவது அனைவரும் தெரிந்த ஒன்றாகும். ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்களை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். எங்களுக்கு தெரிந்து உள்நோக்கம் இல்லாத நல்ல திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை எங்களுக்கு தெரியப்படுத்தினால் நாங்களும் தெளிவு பெறுவோம்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அளித்த பதிலை போல் our steps are measured என்று கூறினார் இது முதலமைச்சரின் ஆட்சிக்கு மீண்டும் பெருமையினை சேர்க்கும் . தமிழக ஆசிரியர் கூட்டணி  ஒரு அரசியல் கட்சியை சார்ந்த இயக்கம் அல்ல. ஆனால் 50 ஆண்டுகால பொது வாழ்வுக்குரிய  எங்களைப் போன்றவர்கள் பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர், இனமான பேராசிரியர், தமிழ்நாட்டில் விடியலாக தோன்றி நல்லாட்சியினை நடத்தி வரும் தளபதியார் ஆகியோரின் கொள்கை வழிகாட்டுதலில் தடம் மாறாது செயல் பட்டு வருபவர்கள் நாங்கள்.

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நமது அரசின் மீது வெறுப்புணர்வினை ஏற்படுத்தி வரும் அலுவலர்களை இனம் கண்டு நல்வழி படுத்துங்கள். அதிகார எல்லையைத் தாண்டி பெண் ஆசிரியர்கள் உட்பட ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கு நிர்வாக மனித நேயமற்ற சித்ரவதையினை ஏற்படுத்தி வருவதை தடுத்து நிறுத்துங்கள். முந்தைய ஆட்சியை நினைவுபடுத்துவது போல் தவறான புள்ளி விவரங்களை வெளியிடுவதை முற்றிலும் தவிர்த்திட பெரிதும் வேண்டுகிறோம். எந்த நிலைமையிலும் கொள்கை வைரமாக இருந்து கொண்டு நல்லாட்சிக்கு உங்களுடன் இணைந்து பயணத்தை தொடருவோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறோம்.

வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS)  அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com. தமிழக ஆசிரியர் கூட்டணிக்காக.

No comments